பெட்டாலிங் ஜெயா: இயற்கைப் பேரிடர்கள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் முன்னெச்சரிக்கை அமைப்பு இவ்வாண்டு இறுதிக்குள் மலேசியா முழுவதும் செயல்பாட்டுக்கு வரும் என மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னதாக, வரும் வியாழக்கிழமை (நவம்பர் 19) அலைபரப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைப்பின் தயார்நிலைச் சோதனை செய்யப்படும் என அது கூறியது.
அலைபரப்புத் தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் ஒரே நேரத்தில் அவசரச் செய்திகளை அனுப்பும் செயல்முறையாகும்.
மேலும், அவசரகால எச்சரிக்கைகளைப் பெற, பொதுமக்கள் தங்களின் கைப்பேசி மென்பொருள்களைப் புதுப்பித்துக்கொள்ள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சிலாங்கூர், கோலாலம்பூர், கிளந்தான், பாகாங் ஆகிய வெள்ள அபாயம் அதிகம் இருக்கும் பகுதிகளில் அச்சோதனை கவனம் செலுத்தும்.
மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையமும் அந்நாட்டுத் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பும் இணைந்து அந்த அமைப்பை உருவாக்குகின்றன.
இணையம், குறுந்தகவல், கைப்பேசி எண்கள் போன்ற தகவல்கள் இன்றி பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கைப்பேசிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை அனுப்பப்படும். பார்வை, செவித்திறன் குறைபாடுடையோருக்கும் உதவும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது.
வெள்ளம் போன்ற பேரிடர்களின் பாதிப்பை இது குறைக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறைத் தலைமை இயக்குநர் முகம்மது ஹிஷாம் முகமது அனிப் நம்பிக்கை தெரிவித்தார்.
