மலேசியா: சளிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்து முதியோருக்கே முதலில் வழங்கப்படும்

3 mins read
48fa3fac-f299-4a0f-a966-98eec84efd2f
மலேசியாவில் சளிக்காய்ச்சல் அதிகரித்திருப்பதாகத் தெரியவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது. - படம்: பிக்சாபே

பெட்டாலிங் ஜெயா:  பல நோய்கள் உள்ள முதியோருக்கே சளிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்து முதலில் வழங்கப்படும் என்று மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனவரி 24ஆம் தேதி மலேசிய சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் முகம்மது ரட்சி அபு ஹசான் அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 60 வயதுக்கு மேற்பட்ட, சளிக்காய்ச்சலுடன் மேலும் ஒரு நோயுள்ளவருக்கே தடுப்பூசி மருந்து முதலில் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

“எனினும், இது தடுப்பூசி மருந்து கையிருப்பு, இதற்கு நோயாளிகள் தகுதி பெறுகின்றனரா எனபதைப் பொறுத்தது,” என்று டாக்டர் முகம்மது ரட்சி விளக்கினார்.

மலேசியாவில் அனைத்துலக ரீதியில் புகழ்பெற்ற ஒருவர் சளிக்காய்ச்சலைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இறந்தார்.

அத்துடன், ஜப்பானில் சளிக்காய்ச்சல் பரவி வருவதால், சளிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், தற்போதைய நிலையில் மலேசியாவில் அந்தத் தடுப்பூசி மருந்து போதுமான அளவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், சில வகையான தடுப்பூசி மருந்துகள் தற்பொழுது இல்லை என அவர் விளக்கினார்.

இதுகுறித்துப் பேசிய மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி, தற்பொழுது சளிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்துகள் தீர்ந்துவிட்டதாகக் கூறினார். எனினும், புதிய தடுப்பூசி மருந்துகள் மார்ச் மாதம் வரவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதை மருந்தகங்கள் உறுதி செய்துள்ளதாக டாக்டர் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.

“உலக அளவில் சளிக்காய்ச்சல் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. அதனால், மருந்துக் கையிருப்பு தீர்ந்துவிட்டது. ஆனால் புதிய மருந்துத் தொகுப்பு மார்ச் மாத தொடக்கத்தில் வரும்,” என்று டாக்டர் ஸுல்கிஃப்லி கூறினார்.

மேலும், மூன்று வெவ்வேறு வகையான சளிக்காய்ச்சலை தடுக்கக்கூடிய தடுப்பூசி மருந்தை மருந்தகங்கள், மருந்தக நிறுவனங்கள் கொண்டு வரவுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, தைவான் நாட்டைச் சேர்ந்த பார்பி ஸு என்ற நடிகை மரணமடைந்ததைத் தொடர்ந்து தடுப்பூசியை நாடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தனியார் மருத்துவர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் டாக்டர் சண்முகநாதன் கணேசன் என்பவர் கூறுகிறார்.

“தற்போதைய நிலையில் ‘சனோஃபி’, ‘ஸுலிக்’ போன்ற மருந்து நிறுவனங்களின் தயாரிப்போ, முன்றாம் தரப்பு மருந்து விற்பனை நிறுவனங்களின் மருந்துகளோ கைவசம் இல்லை,” என்று திரு சண்முகநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில், சனோஃபி தடுப்பூசி மருந்து ‘ஏ’, ‘பி’ ரக சளிக்காய்சசலுக்கு எதிராக மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

“ஃபுளுவோரிக்ஸ், ‘வேக்சிகிரிப்’ போன்ற புது வகை சளிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்துகள் மார்ச் மாத தொடக்கத்தில் கிடைக்கலாம்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தடுப்பூசி மருந்துகளின் தேவை அதிகரித்திருந்தாலும் அது எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைக் கூறுவது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக தடுப்பூசி மருந்துகள் கேட்கின்றனர் என்றும் திரு சண்முகநாதன் கூறினார்.

ஜப்பானில் தற்பொழுது பரவி வரும் சளிக்காய்ச்சலும் தடுப்பூசி மருந்துத் தட்டுப்பாடுக்கு காரணம் என அவர் விளக்கினார். இது ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் மலேசியர்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்