புக்கிட் மெர்த்தாஜம்: மலேசியா, ரோன்95 (RON95) வகை பெட்ரோலின் விலையைத் தொடர்ந்து லிட்டருக்கு 1.99 ரிங்கிட் ($0.65) எனும் நிலையிலேயே வைத்திருக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் எண்ணெய் விநியோகப் பாதைகளும் நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். அதனால் உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்திருப்பதையும் திரு அன்வார் சுட்டினார். சில நாடுகளில் எண்ணெய் விலை லிட்டருக்கு 10 ரிங்கிட்டிற்கும் மேல் இருப்பதாக அவர் கூறினார்.
“தற்போதைய முன்னுரைப்புகளின் அடிப்படையில், மே மாதம்வரை எண்ணெய் விலையை மாற்றாமல் வைத்திருக்க முடியும்,” என்று மலேசியப் பிரதமர் தெரிவித்தார்.
“தாக்கத்தைச் சமாளிக்க நாங்கள் எரிவாயு உற்பத்தியையும் அதிகரிக்கிறோம்,” என்றார் அவர்.
அமைச்சரவை, தேசியப் பாதுகாப்பு மன்றம், பெட்ரோனாஸ் உட்பட பல நிலைகளில் அன்றாடம் எண்ணெய் விலையை அரசாங்கம் கண்காணித்து வருவதாகத் திரு அன்வார் கூறினார்.
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டும் தள்ளுபடியுடன் கூடிய ரோன்95 வகை பெட்ரோல் லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.
கவனத்துடன் திட்டமிட்டதால் இதுவரை நிலைமையைச் சமாளிக்க முடிந்ததாக மலேசியப் பிரதமர் தெரிவித்தார். இருப்பினும், பொருளியல் கண்ணோட்டம் தொடர்ந்து சவால்மிக்கதாய் இருப்பதாக அவர் சொன்னார். உரம், உணவு போன்ற துறைகளை விலைவாசி உயர்வு பாதித்துள்ளது என்றார் அவர்.
நோன்புப் பெருநாளுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை (மார்ச் 20) பெர்மாத்தான் பாசிர் சமூக மண்டபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திரு அன்வார் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
விழாக்காலத்தின்போது கவனத்துடன் செலவு செய்யுமாறு அவர் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார். உதவி தேவைப்படுவோருக்குக் கூடுதல் ஆதரவு தருமாறு நாட்டு மக்களுக்கு மலேசியப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

