தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவிலிருந்து ஊழியர்களைப் பணியமர்த்துவது மிகவும் வெளிப்படையானதாக இருக்கும்: மலேசிய மனிதவள அமைச்சர்

2 mins read
245bf673-8826-489d-8406-eb71e0c4a1d0
இருநாடுகளுக்கு இடையே எந்த வழிகாட்டுதல்களும் இல்லாவிட்டாலும், 133,000க்கும் அதிகமான இந்திய ஊழியர்கள் இன்னும் மலேசியாவில் பணியாற்றுகின்றனர் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார். - படம்: பெர்னாமா

இந்தியாவிலிருந்து, மலேசியாவில் வேலை செய்ய வரும் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவது, இரு நாடுகளும் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மிகவும் வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய மலேசிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், “2014ஆம் ஆண்டு முன்னைய ஒப்பந்தம் காலாவதியான பிறகு இப்போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழிலில் ஊழியர் சுரண்டல் போன்ற மோசமான நடைமுறைகளையும் கட்டுப்படுத்தும். அதே நேரத்தில் நாடு மற்றும் உள்ளூர் ஊழியர்கள்மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மோசமான நடைமுறைகளைத் தவிர்க்கும்,” என்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

“இருநாடுகளுக்கு இடையே எந்த வழிகாட்டுதல்களும் இல்லாவிட்டாலும், 133,000க்கும் அதிகமான இந்திய ஊழியர்கள் இன்னும் மலேசியாவில் பணியாற்றுகின்றனர்,” என்றார் திரு சிம்.

இந்தியாவிற்கு மூன்று நாள் பணிநிமித்த பயணத்தை மேற்கொண்ட மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் திரு சிம்மும் சென்றிருந்தார்.

திரு சிம், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இடையேயான ஆவணங்களின் பரிமாற்றம் மூலம் ஊழியர்கள் ஆட்சேர்ப்பு, வேலைவாய்ப்பு, திருப்பி அனுப்புதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆகஸ்ட் 20ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை மலேசியப் பிரதமர் அன்வாரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பார்வையிட்டனர்.

டேலண்ட்கார்ப் மலேசியாவுக்கும் இந்தியாவில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்துக்கும் இடையே ஒருங்கிணைந்த திறன் பயிற்சி சுற்றுச்சூழல், வேலை பொருத்தத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அமைச்சர் சிம் கூறினார்.

வேலைவாய்ப்புத் துறையில், சேவைத் துறை, தோட்டங்கள், விவசாயம் உட்பட மலேசியாவில் ஆறு முக்கியமான துறைகளுக்கு இந்தியாவிலிருந்து ஊழியர்கள் தேவை என்றார்.

மேலும், மலேசியாவில் பொறியியல், தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரிய, 85,000க்கும் அதிகமான இந்தியாவின் திறமையான ஊழியர்கள் உள்ளனர் என்றும் மலேசிய மனிதவள அமைச்சர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்