$160 மில்லியன் கச்சா எண்ணெய்யுடன் இரு கப்பல்களை மடக்கியது மலேசியா

$160 மில்லியன் கச்சா எண்ணெய்யுடன் இரு கப்பல்களை மடக்கியது மலேசியா

2 mins read
65d36032-3b33-4b44-ac2f-de3fc11a3e72
பினாங்கு துறைமுகத்தின் வடக்கே இரு கப்பல்கள் நங்கூரமிடப்பட்டு இருந்ததாக மலேசியக் கடல்துறை அமலாக்க அமைப்புக்கு ரகசியத் தகவல் சென்றது. - படம்: மலேசியக் கடல்துறை அமலாக்க அமைப்பு

கோலாலம்பூர்: சட்டவிரோத எண்ணெய் பரிமாற்ற வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு எண்ணெய்க் கப்பல்களை மலேசியா தடுத்து வைத்துள்ளது.

அவற்றில்  US$129 மில்லியன் (S$160 மில்லியன்) மதிப்புள்ள கச்சா எண்ணெய் இருந்தது.

பினாங்கு அருகே தடுக்கப்பட்ட அந்தக் கப்பல்களில் இருந்த எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை (ஜனவரி 31) கூறினர்.

மலேசியக் கடல் நீரில் அனைத்துலகப் பொருளியல் தடைகளை மீறும் வகையில் எண்ணெய் மாற்று வர்த்தகம் நடைபெறுவதன் தொடர்பில் கண்காணிப்பு வளையத்துக்குள் மலேசியா வைக்கப்பட்டது.

அதனை அறிந்த மலேசியா, தனது கடல்துறை வட்டாரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்கப்போவதாகக் கடந்த ஆண்டு சூளுரைத்தது.

அதன் ஒரு பகுதியாக ஜனவரி 29ஆம் தேதி எண்ணெய்க் கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலேசியக் கடல்துறை அமலாக்க அமைப்பு தெரிவித்துள்ளது.

பினாங்கு துறைமுகத்தின் வடக்கே அந்த இரு கப்பல்களும் நங்கூரமிடப்பட்டு இருந்ததாக ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கியதாக அது கூறியது.

“அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரு கப்பல்களும் ஒன்றாக நங்கூரமிடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கப்பல்களில் சட்டவிரோத எண்ணெய்ப் பரிமாற்றம் நடைபெறுவதாக சந்தேகம் எழுந்தது,” என்று பினாங்கு கடல்துறை அமைப்பின் இயக்குநர் முகம்மது சஃபி முகம்மது ரம்லி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இரு கப்பல்களிலும் இருந்த எண்ணெய்யின் மலேசிய ரிங்கிட் மதிப்பு 512 மில்லியன் என்றும் அவர் கூறினார்.

அந்தக் கப்பல்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவை என்றும் எங்கிருந்து புறப்பட்டன என்றும் இதுவரை தகவல் இல்லை. கப்பல்களில் இருந்த ஊழியர்கள் சீனா, மியன்மார், ஈரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்,” என்றும் திரு முகம்மது சஃபி கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஎண்ணெய்க் கப்பல்வர்த்தகம்