தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குப்பை கொட்டினால் தண்டனை விதிக்க மலேசியாவில் புதிய சட்டம் அறிமுகம்

2 mins read
b5e0a04d-988d-4fb7-b3c8-800899f56814
புதிய சட்டமானது, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் உரிய விவாதங்களுக்குப் பிறகு மார்ச் 6ஆம் தேதிக்குள் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் திரு நிகா கோர் மிங் தெரிவித்தார். - சித்திரிப்பு: ஊடகம்

ஈப்போ: குப்பை கொட்டும் குற்றச்செயலில் ஈடுபட்டோர்க்கு சமூகச் சேவையாற்ற உத்தரவிடும் நடவடிக்கை இந்த ஆண்டு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வீடமைப்பு, உள்ளாட்சி அமைச்சர் நிகா கோர் மிங் (Nga Kor Ming) தெரிவித்துள்ளார்.

குப்பை கொட்டும் குற்றங்களைத் தொடர்ந்து செய்வோர், தெருக்கள், வடிகால்கள், பொது இடங்களைச் சுத்தம் செய்யும்போது சிறப்புச் சீருடைகளை அணிய வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் புதிய சட்டமானது, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் உரிய விவாதங்களுக்குப் பிறகு மார்ச் 6ஆம் தேதிக்குள் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் திரு நிகா தெரிவித்தார்.

நாடாளுமன்றம், மேலவையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தம்புனில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறினார்.

“பலமுறை இக்குற்றத்தைப் புரிவோர் தெருக்களைக் கூட்டுவது, வடிகால்களைச் சுத்தப்படுத்துவது ஆகிய பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். மேலும், பொதுக் கழிப்பறைகளையும் கழுவ வேண்டியிருக்கும்.

“அதிகபட்சமாக, 12 மணிநேரத்துக்கு இந்த தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன் 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும்,” என்றார் அமைச்சர் நிகா.

மலேசியா தூய்மையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“உண்மையான மாற்றங்களை அமல்படுத்தாவிட்டால், கடந்த 1980களில் இருந்து ‘கிழக்கு நோக்கிய கொள்கை’யைப் பின்பற்றுவது அர்த்தமற்றுப் போய்விடும். இந்தக் கொள்கையை நான் பின்பற்றத் தொடங்கி 43 ஆண்டுகள் ஆகிவிட்டன.

“புதிய சட்டத்துக்கு இணங்கத் தவறுவோர் நீதிமன்றங்களில் குற்றம்சாட்டப்படுவர்,” என்றும் அவர் எச்சரித்தார்.

“மலேசியாவைச் சுத்தமாக வைத்திருப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும். எழுத்தறிவின்மை என்பதை இனியும் ஒரு காரணமாக முன்வைக்க இயலாது.

“அனைவரும் 12 ஆண்டுகளுக்காவது பள்ளிக்குச் செல் கிறோம். எனவே, குப்பைகளைத் தொட்டியில் கொட்ட வேண்டும் என்பதுகூட தெரியாது என்று யாரும் கூற இயலாது.

“விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இச்செயல்பாட்டைத் தவிர்க்கவும் சமூகச் சேவை உத்தரவிடப்படுவோர் குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

“ஒருவர் எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும், அவரது மனநிலை கற்காலத்திலேயே சிக்கிக்கொண்டிருக்குமானால் அத்தகைய போக்கை ஏற்க இயலாது,” என்றார் திரு நிகா கோர் மிங்.

குறிப்புச் சொற்கள்