மலேசியா: வாகன ஓட்டுநர்கள், பயணிகள் இருக்கைவார் அணிவது கட்டாயம்; விரைவில் அமல்

மலேசியா: வாகன ஓட்டுநர்கள், பயணிகள் இருக்கைவார் அணிவது கட்டாயம்; விரைவில் அமல்

படம்: பிக்சாபே

12 Sep 2025 - 11:27 am

1 mins read

புத்ராஜெயா: மலேசியா முழுவதும் தனியார் வாகன ஓட்டுநர்களும் பயணிகளும் இருக்கைவாரைக் கட்டாயமாக அணிவதை உறுதிசெய்யும் அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கவுள்ளதாக மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தற்போது, இருக்கைவார் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சாலைப் போக்குவரத்துத் துறையின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், விரைவில் அமலாக்க நடவடிக்கைகள் தொடங்கும் என்று அதன் தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ராம்லி தெரிவித்தார்.

அமலாக்க நடவடிக்கைகள் தொடங்கும் சரியான தேதியை அவர் வெளியிடவில்லை.

இருக்கை வார் அணிவது தொடர்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) தொடங்கப்பட்ட இயக்கம், சாலைப் பாதுகாப்பு பழக்கத்தை மேம்படுத்துவதையும் ஓட்டுநர்களுக்கு மட்டுமல்லாமல், வாகனத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் இருக்கைவார் அணிவதன் அவசியத்தை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

“தனியார் கார் பயணிகள் இருக்கைவார் அணிவதை உறுதிசெய்யும் அமலாக்கத்தை விரைவில் அறிவிப்போம். இப்போதைக்கு, முதலில் இந்த இயக்கத்தைத் தொடங்குகிறோம்,” என்று வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் திரு ஏடி ஃபட்லி கூறினார்.

இருக்கைவாரை அணியத் தவறினால், RM300 (S$90) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இருக்கைவார் அணியும் பயணிகள் சாலை விபத்தில் சிக்க நேரிட்டால், அவர்கள் உயிரிழக்கும் அபாயத்தை 50 விழுக்காடு வரை குறைக்க முடியும் என்று மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, விரைவு, சுற்றுலாப் பேருந்துகளின் ஓட்டுநர்களும் பயணிகளும் இருக்கைவார் அணிவதை உறுதிசெய்யும் அமலாக்க நடவடிக்கை ஜூலை 1 முதல் நடப்பில் இருந்து வருவதாக திரு ஏடி ஃபட்லி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சாலைப் பாதுகாப்புபயணிகள்இருக்கை வார்மலேசியா