கோலாலம்பூர்: மலேசியாவில் காலஞ்சென்ற முன்னாள் நிதியமைச்சர் டயிம் ஸைனுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
திரு டயிம் நவம்பர் 13ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில், அவர் மீதான வழக்கைத் தொடர விரும்பவில்லை என்று அரசாங்கத் தரப்பு கூறியதை அடுத்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி திரு டயிமை அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
காலஞ்சென்ற திரு டயிமின் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவரது ஆன்மா அமைதிபெற வேண்டுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டதாக த ஸ்டார் நாளேடு நவம்பர் 20ஆம் தேதி தகவல் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் திரு டயிம் அந்த வழக்கு தொடரவேண்டும் என்று விரும்பியதாக அவரது வழக்கறிஞர் கூறினார். தமது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவது திரு டயிமின் இறுதி ஆசை என்று வழக்கறிஞர் கூறியதாக தி எட்ஜ் மலேசியா செய்தி நிறுவனம் தெரிவித்தது. திரு டயிமின் குடும்பத்தினரும் வழக்கு தொடரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.