கோலாலம்பூர்: மில்லியன்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்த மலேசியாவை அந்நாட்டுக்கான உலக வங்கியின் தலைமைப் பொருளியல் வல்லுநர் அபூர்வா சங்கி பாராட்டியுள்ளார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுக்குமுன் மலேசியர்களில் ஏறக்குறைய பாதிக்கும் அதிகமானோர் வறுமையில் வாடினர் என்ற டாக்டர் சங்கி, தற்போது 100ல் ஆறு பேர் மட்டுமே அந்த நிலையில் இருப்பதாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.
ஏறக்குறைய 14 மில்லியன் பேரை மலேசியா ஏழ்மையிலிருந்து மீட்டுள்ளது என்றும் வறுமை நிலையை ஒழிக்க மலேசியா தொடர்ந்து முயற்சி செய்கிறது என்றும் அவர் மெச்சினார்.
எளிய பொருள்களின் உற்பத்தியிலிருந்து சிக்கலான பொருள்களின் உற்பத்திக்கு மலேசியா மாறியிருக்கிறது என்ற டாக்டர் சங்கி, அதற்குக் கூடுதல் திறனும், அறிவும், தொழில்நுட்பமும் தேவை என்றார்.
“ஏற்றுமதிகளைச் சார்ந்திருக்கும் அண்டை நாடுகளைவிட மலேசியப் பொருளியலின் பன்முகத்தன்மையும் அது ஏற்றுமதி செய்யும் பொருள்களின் நுட்பமும் மேலோங்கியிருக்கிறது. 1960களில் மலேசியா ஏற்றுமதி செய்த அடிப்படை அல்லது எளிய பொருள்களின் மொத்த ஏற்றுமதி 95 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 30 விழுக்காடாக இருக்கிறது,” என்றார் டாக்டர் சங்கி.
இந்த உருமாற்றம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக உயர்த்தியுள்ளது என்றார் அவர்.
பிலிப்பீன்ஸ், ஸாம்பியா, இன்னும் பல நாடுகள் மலேசியா தொடங்கிய புள்ளியிலிருந்துதான் தொடங்கின.
ஆனால் இன்று, மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிலிப்பீன்சைவிட 3.6 மடங்கும் ஸாம்பியாவைவிட 9 மடங்கும் அதிகமாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பன்முகத்தன்மை கொண்ட பொருளியலுக்காகவும் வளத் தட்டுப்பாட்டிலிருந்தும் தப்பித்ததற்காகவும் மலேசியர்கள் பெருமிதம்கொள்ளவேண்டும் என்று டாக்டர் சங்கி குறிப்பிட்டார்.
உணவில் மட்டுமல்ல ஒப்பனைப் பொருள்கள், தளவாடங்கள், சுற்றுலா, மருத்துவம் போன்ற பல துறைகள் ஹலால் முத்திரையுடன் இருப்பதற்கு அனைத்துலக அளவிலும் மலேசியா பிரபலமடைந்துள்ளதையும் அவர் சுட்டினார்.
மலேசியா வழங்கும் ஹலால் சான்றிதழ்களும் அதற்கான தரநிலைகளும் அனைத்துலக அளவிலான தரத்தை நிர்ணயித்துள்ளது என்றார் டாக்டர் சங்கி.

