பணவீக்கம் குறைந்தாலும் மலேசியாவில் வாழ்க்கைச் செலவினம் கூடியுள்ளது

2 mins read
70e676a4-71bb-4546-8bd3-44c2790617e0
மலேசியாவில் உணவு பானம், தங்குவிடுதி, கல்வி போன்ற துறைகளில் செலவுகள் அதிகரித்தன.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: பயனீட்டாளர் விலை குறியீட்டின் தரவுகளின்படி மலேசியாவில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது.

உலக பொருளியல் சூழல் நிச்சயமற்ற நிலையில் உள்ளதாலும் உள்நாட்டில் கொள்கை மாற்றம் காரணமாகவும் வாழ்க்கைச் செலவுகள் கூடியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் மலேசியாவின் பணவீக்கம் குறைவாக உள்ளது.

இவ்வாண்டு மார்ச் மாதம் மலேசியாவின் பணவீக்கம் 1.4 விழுக்காடாகப் பதிவானது. ஜனவரி மாதம் அது 1.7 விழுக்காடாகவும் பிப்ரவரியில் 1.6 விழுக்காடாகவும் பதிவானது.

அதேபோல் இவ்வாண்டு மார்ச் மாதம் பயனீட்டாளர் விலை குறியீடு 134.1 புள்ளியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அது 132.2 புள்ளியாக இருந்தது.

இவ்வாண்டு மலேசியாவில் உணவு பானம், தங்கும் விடுதி, சுய பராமரிப்பு, கல்வி, காப்பீடு, நிதி ஆகிய துறைகளில் செலவுகள் அதிகரித்தன.

செலவுகள் தொடர்பான பாரங்கள் மக்களைப் பாதிக்காமல் இருக்க மலேசியா சில கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

உலக நாடுகளில் பொருளியல் பிரச்சினை ஏற்படுவதால் உள்ளூர் வர்த்தகர்களுக்குச் செயல்பாடுச் செலவுகள் அதிகரிக்கிறது. அதை ஈடுகட்டப் பொருள்களின் விலை கூட்டப்படுகிறது. இதனால் மக்கள் கூடுதல் செலவு செய்ய நேரிடுகிறது என்றும் கவனிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் மலேசிய மக்களின் ஊதியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதில் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால் பொருளியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் சிரமம் இருக்காது என்று அவர்கள் கூறினர்.

மலேசியாவின் மத்திய வங்கி இவ்வாண்டு பொருளியல் வளர்ச்சி 4.5 விழுக்காட்டுக்கும் 5.5 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கும் என்று முன்னுரைத்துள்ளது.

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் இருந்தாலும் உள்ளூர் அளவில் தேவைகள் அதிகமாக இருப்பதால் மத்திய வங்கி அதன் முன்னுரைப்பை மாற்றவில்லை.

இருப்பினும் உலக வங்கி மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி 3.9 விழுக்காடு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. பணவீக்கம் 2.6 விழுக்காடு வரை செல்லலாம் என்றும் கூறியது.

குறிப்புச் சொற்கள்