புகைமூட்டத்தால் மலேசியாவுக்கு அன்றாடம் $15.72 மில்லியன் வரை இழப்பு: வல்லுநர்கள் கணிப்பு

புகைமூட்டத்தால் மலேசியாவுக்கு அன்றாடம் $15.72 மில்லியன் வரை இழப்பு: வல்லுநர்கள் கணிப்பு

படம்: ஏஎஃப்பி

14 Oct 2026 - 10:11 am

2 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவைப் பாதித்துள்ள புகைமூட்டம், தொந்தரவையும் சுகாதாரப் பிரச்சினைகளையும் மட்டும் அளிக்கவில்லை. அது, அந்நாட்டுக்கு நிதி சார்ந்த பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

பொருளியல் நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுவது, சுகாதாரப் பராமரிப்புச் செலவு அதிகரித்துவருவது, ஊழியர்களின் உற்பத்தித்திறன் குறைந்துவருவது ஆகிய காரணங்களினால் மலேசியாவுக்கு மில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்படுவதாகப் பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

நிதிரீதியான இழப்பு

அதிக காலம் நீடிக்கும் புகைமூட்டத்தால் மலேசியா நாளுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து (6.29 மில்லியன் வெள்ளி) 50 மில்லியன் ரிங்கிட் வரை இழக்கக்கூடும் என்று சன்வே பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் இயா கிம் லெங் தெரிவித்துள்ளார்.

இது குறைவான மதிப்பீடுதான் என்றும் அவர் சுட்டினார்.

“உண்மையில் பொருளியல்ரீதியான இழப்பு மாதத்துக்கு 600 மில்லியனிலிருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயரக்கூடும்,” என்று பேராசிரியர் இயா குறிப்பிட்டார்.

1997ஆம் ஆண்டு ஏற்பட்ட புகைமூட்டத்தால் கிட்டத்தட்ட 800 மில்லியன் ரிங்கிட் செலவு ஏற்பட்டதாகவும் 2013ல் அது 1.57 பில்லியன் ரிங்கிட்டாகவும் 2019ல் 5.2 பில்லியன் டாலராகவும் (6.66 பில்லியன் வெள்ளி) பதிவானதென அவர் தெரிவித்தார்.

“சுற்றுலாத் துறை, விமானத் துறை ஆகியவைதான் ஆக அதிகமாகப் பாதிக்கப்படும் துறைகளாகும். காற்று மாசுபடுவது பயணிகள் வருகையை எட்டு விழுக்காடு வரை குறைக்கக்கூடும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 பில்லியன் ரிங்கிட் வரையிலான இழப்பை எதிர்கொள்ளக்கூடும்,” என்றார் அவர்.

செய்ன்ஸ் இஸ்லாம் மலேசியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பொதுச் சுகாதார மருத்துவ வல்லுநருமான டாக்டர் முகம்மது ஹஃபிஸ் பின் ஜாஃபர், 2012லிருந்து 2015ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் தாம் மேற்கொண்ட ஆய்வில் புகைமூட்டம் தொடரும் காலத்தில் அதிகமுறை மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் செல்வதால் ஏற்பட்ட செலவு கிட்டத்தட்ட 14.6 மில்லியன் ரிங்கிட்டாகப் பதிவானதாகக் கூறினார்.

“தேசிய அளவில் மக்கள் நோய்வாய்ப்படுவதால் ஏற்பட்ட செலவு 1997ல் பதிவான 21 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2013ல் 410 மில்லியன் ரிங்கிட்டுக்கு அதிகரித்தது,” என்றார் அவர்.

ஆண்டுதோறும் புகைமூட்டம் ஏற்படுவதற்கு முன்பு மலேசியா கூடுதல் தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதைச் சுட்டிய டாக்டர் ஹஃபிஸ், இதன் தொடர்பில் இந்தோனீசிய அரசாங்கமும் ஒத்துழைக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாபுகைமூட்டம்இழப்புநிதிவல்லுநர்