13 வயதுக்கும் குறைவானவர்கள் சமூக ஊடகக் கணக்கு வைத்திருக்க மலேசியா தடை விதிக்கக்கூடும்

2 mins read
a398d2ed-a8af-4d0d-babd-2e02ce4250bf
இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கும் சமூக ஊடகத் தளங்களுக்கும் பெற்றோருக்கும் இருப்பதாக மலேசியாவின் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் வலியுறுத்தினார். - படம் UNSPLASH

கோலாலம்பூர்: மலேசியாவில் 13 வயதுக்கும் குறைவானோர் சமூக ஊடகக் கணக்கு வைத்திருக்க தடை விதிக்கப்படக்கூடும் என்று அந்நாட்டின் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான கூடுதல் அமலாக்க நடவடிக்கை குறித்து தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

“சமூக ஊடகக் கணக்கு வைத்திருக்க பெரும்பாலான சமூக ஊடகத் தளங்கள் 13 வயதுக்கும் குறைவானவர்களை அனுமதிப்பதில்லை. ஆனால் 13 வயதுக்கும் குறைவான மாணவர்கள் பலர் டிக்டோக் தளத்தில் கணக்கு வைத்திருக்கின்றனர். இது விதிமீறலாகும். இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது டிக்டோக் நிறுவனத்துக்கும் தெரியும்,” என்று செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 29) அமைச்சர் ஃபாமி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வயது கட்டுப்பாட்டை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தேவையான வழிவகைகளை தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கும் சமூக ஊடகத் தளங்களுக்கும் பெற்றோருக்கும் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசிய தொடர்பு, பன்னூடக ஆணையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சிறுவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மொத்தம் 1,443 பதிவுகள் அகற்றப்பட்டன.

தொடர்பு, பன்னூடகச் சட்டம் 1998 மீறப்பட்டதால் அப்பதிவுகள் அகற்றப்பட்டதாக திரு ஃபாமி குறிப்பிட்டார்.

இன்றைய சவால்மிக்க மின்னிலக்கச் சூழலைச் சமாளிக்க பதின்மவயதினருக்கு ஆற்றல்களை ஏற்படுத்தி தரும் வகையில் 13 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கு உகந்த மின்னிலக்கப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இப்பாடங்கள் மூலம் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும்போது விழிப்புடன் இருக்க அவர்களுக்குக் கற்பிக்கப்படும் என்று திரு ஃபாமி கூறினார்.

“சமூக ஊடகத்தில் காண்பதெல்லாம் உண்மையன்று,” என்றார் அமைச்சர் ஃபாமி.

குறிப்புச் சொற்கள்