மலேசியா உயர் வருமான நிலையை எட்டக்கூடும்: ரமணன்

மலேசியா உயர் வருமான நிலையை எட்டக்கூடும்: ரமணன்

படம்: பெர்னாமா

26 Jul 2026 - 12:43 pm

2 mins read

புக்கிட் மெர்டாஜாம்: உலக வங்கியின் தனிநபர் வருமான வரம்பின்கீழ், மலேசியா உயர் வருமான நாடு எனும் தகுதியை எட்டுவதற்கு இன்னும் ஒரே ஒரு படியே எஞ்சியுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வார் இப்ராகிமின் தலைமைத்துவத்தின்கீழ், உலக வங்கியின் கணிப்புப்படி மலேசியாவின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI) 12,380 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு பதிவான ஆக அதிக நிலை இதுவே ஆகும்.

அதேவேளையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படும் மலேசியப் பொருளியலின் அளவு 472 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து, 1957ஆம் ஆண்டிற்குப் பிறகான உச்சத்தை எட்டியுள்ளது.

2027ஆம் நிதியாண்டிற்கு உலக வங்கி நிர்ணயித்துள்ள உயர் வருமான நாட்டிற்கான வரம்பு 14,376 அமெரிக்க டாலர். மலேசியா அந்த இலக்கிற்கு மிக அருகில் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரமணன், நாட்டின் பொருளியலை வலுப்படுத்தவும் முதலீடுகளை ஈர்க்கவும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே இதற்கு முதன்மைக் காரணம் என்றார்.

'2026 தேசியப் பயிற்சி வாரத்' தொடக்க விழாவில் பேசிய அவர், திறமையான மனிதவளத்தை உருவாக்க வெளிப்படையான நிதி நிர்வாகம் அவசியம் என வலியுறுத்தினார்.

மலேசிய மனிதவள மேம்பாட்டுக் கழகம் இதற்குப் பெரிதும் உதவுகிறது. பினாங்கு மாநிலத்தில் மட்டும் 8,000க்கும் அதிகமான முதலாளிகளும் 445,000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் இதில் பதிவுசெய்துள்ளனர்.

2026ஆம் ஆண்டின் முற்பாதியில், பினாங்கில் பயிற்சித் தீர்வையாக 129.72 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டது. அதில் 113.74 மில்லியன் ரிங்கிட், 125,000க்கும் அதிகமான பயிற்சிகள் மூலம் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

திறமையான நிர்வாகம் மூலம் 437.3 மில்லியன் ரிங்கிட் மீட்கப்பட்டதாகவும், இளையர்கள், ஊழியர்கள், பணி ஓய்வுபெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள தேசியப் பயிற்சி வாரம் ஒரு நல்ல வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
மொத்த உள்நாட்டு உற்பத்திஉலக வங்கிமலேசியா