செராஸ்: மலேசியாவின் செராஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 5) 50க்கும் மேற்பட்டோர் அடங்கிய ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று கரவோக்கே நிலையத்திற்குள் புகுந்து, அங்குள்ள பொருள்களை உடைத்து நாசப்படுத்தியதாக பெரித்தா ஹரியான் நாளிதழ் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) செய்தி வெளியிட்டது.
கண்காணிப்புப் படக்கருவிப் பதிவில், ஒரு பெரிய லாரி அந்தக் கேளிக்கை நிலையத்தை நோக்கிப் பின்னோக்கிச் செல்வதைக் காண முடிகிறது.
லாரி பின்னோக்கிச் சென்றபோது நுழைவாயிலில் உள்ள உலோகக் கதவு மூடியது. பின்னர் லாரி தொடர்ந்து அதிவேகமாகப் பின்னோக்கிச் சென்று, அந்த உலோகக் கதவின் மீது பலமாக மோதியது.
அந்த மோதலின் தாக்கத்தால் கதவு உள்நோக்கி மடிந்து, ஒருவர் மட்டும் உள்ளே நுழைய போதுமான இடைவெளியை ஏற்படுத்தியது.
திடீரென, முகமூடி அணிந்துகொண்டு, நீண்ட தடி போன்ற ஆயுதங்களை ஏந்தியபடி ஆண்கள் பலர் வாயிலைச் சுற்றி மொய்க்கத் தொடங்கினர்.
அவர்களில் ஒருவர் வாயிலை உதைக்க, அந்த லாரி மீண்டும் பின்னோக்கி நகர்ந்து இடைவெளியை அகலப்படுத்த, முகமூடி அணிந்தவர்கள் வளாகத்திற்குள் நுழைந்தனர்.
பின்னர் அந்தக் குழுவினர், தங்கள் ஆயுதங்களை ஓங்கியபடியே உள்ளே பாய்ந்து சென்றனர்.
சம்பவத்திற்குப் பிந்தைய காட்சிகளைக் காட்டும் மற்றொரு காணொளியில், அந்த நிறுவனத்தின் நுழைவாயிலிலும் அதன் அறைகள் மற்றும் நடைபாதைகளிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடப்பது தெரிந்தது.
தொடர்புடைய செய்திகள்
கரவோக்கே நிலையத்தில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. மெத்திருக்கைகள், மேசைகள், நாற்காலிகள், செடிகள் நொறுக்கப்பட்டு, கிழித்து எறியப்பட்டன.
முகமூடிக் கும்பல் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாகத் தப்பி ஓடும்போது பிரிந்து சென்றதும், அவர்களில் சிலர் சாலையைக் கடக்கும் வாகனங்களில் ஏறி குழுக்களாகத் தப்பிச் சென்றதும் மற்றொரு காணொளியில் தெரிந்தது.
சம்பவம் நடந்த அன்று இரவு 7.30 மணியளவில் இதுகுறித்து புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், அச்சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நடந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சுஸ் கூறியதாக ‘தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
“சந்தேகப் பேர்வழிகள் ஒரு லாரியைக் கொண்டு அந்த வளாகத்தின் வாயிலை மோதி, வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து, சொத்துகளைச் சேதப்படுத்தியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

