கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் விளிம்பில் நவம்பர் மாதம் வாகனம் ஒன்று சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி 65 வயதுடைய இரு ஆடவர்கள் மரணமடைந்தனர்.
இந்த டிசம்பர் மாதம் 79 மற்றும் 78 வயதுடைய தம்பதியர் சாபா மாநிலத்தில் உள்ள தாவாவ் நகரில் அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் கால்வாயில் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுபோன்ற சம்பவங்களால் மலேசியாவில் மூப்படைந்து வரும் சமூகம் பற்றிய விவாதம் பரவலாகி வருகிறது. இதனால், அவர்கள் தங்கள் வாகன ஓட்டும் உரிமத்தைப் புதுப்பிக்கும் முன் அவர்களுக்கு சுகாதார, திறன் குறித்த பரிசோதனைகள் கட்டாயமாக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு (2025) ஜனவரி தொடக்கத்தில் முதியோருக்கு கட்டாய உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு முன் அவர்கள் தங்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வலியுறுத்தி சமூக ஊகடங்களில் தகவல் பரவத் தொடங்கியது.
இதன் தொடர்பில் முதியோர் ஈடுபடும் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளதால் அவற்றைக் குறைக்க அவர்களின் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படும்போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் மலாய் மொழி செய்தித்தாளான உத்துசான் மலேசியாவில் செய்தி வெளியானது.
இதையடுத்து மூத்த குடிமக்களின் வாகன ஓட்டுநர் உரிமத்துக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதை எதிர்த்து ‘சேஞ்.ஓர்க் (Change.org website) இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட மனுவில் டிசம்பர் 27 வரையிலான 10 நாள் காலகட்டத்தில் 5,700 கையெழுத்துகள் குவிந்தன.
“மூத்த குடிமக்களின் வாழ்வை மேலும் சிரமம் ஆக்க வேண்டாம். எங்களால் ஒட்டுநர்களை வைத்துக்கொள்ளவோ, அடிக்கடி உயர்ந்துவரும் கிராப் வாடகை கார்களை நாடிச் செல்லவோ வசதியில்லை,” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
சுகாதாரப் பரிசோதனை மூடத்தனமானது, பாரபட்சமானது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மலேசியாவில் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் சாலைப் போக்குவரத்து துறை முதிய ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.