இன, சமயப் பிரிவினைகளில் இருந்து மலேசியா தற்காத்துக்கொள்ள வேண்டும்: அன்வார்

அமைதியும் நிலைத்தன்மையுமே நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளியல் வளத்திற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் அடிப்படையானது

இன, சமயப் பிரிவினைகளில் இருந்து மலேசியா தற்காத்துக்கொள்ள வேண்டும்: அன்வார்

2 mins read
இனம், சமயத்தை பிரச்சினைகளுக்குள் இழுக்கும் உணர்வுகள், அவை அறிவுசார்ந்தவை அல்ல என்றாலும் வலுவானவை. இது நாடு எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால். அதை எதிர்கொள்வது எளிதானது அல்ல-அதற்கு வலிமையும் ஞானமும் தேவை
074bb785-9261-4977-b24e-a09b1eaa84cc
புத்ராஜெயாவில் தேசிய ஒற்றுமை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) திரு அன்வார் இப்ராகிம் உரையாற்றினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: இனம், சமயம் அடிப்படையிலான பிரிவினைகளுக்கு எதிராக நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் பிரச்சினையாக இது உள்ளது. தீவிர வலதுசாரிப் போக்கு, இனவாதம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு போன்ற சிந்தனைகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தலைதூக்குவதை எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். அத்தகைய வெறுப்பு உணர்வு கல்வியறிவு பெற்ற சமூகத்திலும் பரவக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

அறிவு அல்லது தர்க்க ஆதாரம் இல்லாமல் இன, மத வெறுப்பு கருத்துகள் பரப்பப்படுவது மிகுந்த கவலைக்குரியது. இது சமூக ஒற்றுமையைச் சிதைக்கக்கூடியது என்று புத்ராஜெயாவில் தேசிய ஒற்றுமை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) பேசிய அன்வார் குறிப்பிட்டார்.

“இனம், சமயத்தை பிரச்சினைகளுக்குள் இழுக்கும் உணர்வுகள், அவை அறிவுசார்ந்தவை அல்ல என்றாலும் வலுவானவை. இது நாடு எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால். அதை எதிர்கொள்வது எளிதானது அல்ல-அதற்கு வலிமையும் ஞானமும் தேவை,” என்று அவர் கூறினார்.

அமைதியும் நிலைத்தன்மையுமே நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளியல் வளத்திற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் அடிப்படையானது என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.

அரசியல் நிலைத்தன்மை என்பது முக்கிய பொருளியல் பிரச்சினைகளிலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மனித மூலதனத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த கொள்கைகளை செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதைப் பற்றியது.

நிலையான அரசியல், சரியான பொருளியல் கொள்கைகள், மையப்படுத்தப்பட்ட பொருளியல் நடவடிக்கைகள் ஆகியவை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், இளைஞர்களுக்குத் தேவையான புதிய திறன்களில் பயிற்சி அளிப்பதற்கும் அனுமதிக்கும் என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்