ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பத்தில் விரைந்து செயல்படவேண்டும்: அன்வார்

ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பத்தில் விரைந்து செயல்படவேண்டும்: அன்வார்

2 mins read
a51741b7-2baf-462a-96a7-5a588af4d94a
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சிப்பாங்: புதிய தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்துவது, அவற்றை உருவாக்குவது ஆகிய நடவடிக்கைகளை மலேசியா துரிதப்படுத்தவேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

குறிப்பாக ஆளில்லா வானூர்தித் துறையைப் பற்றி அவர் பேசினார். செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க உருமாற்றம் ஆகியவை சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய வானூர்தித் துறை, புத்தாக்கம், உற்பத்தித் திறன், பொருளியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் துறையாக விளங்குகிறது என்றார் திரு அன்வார்.

பொருளியல் வளர்ச்சி

“பொருளியல்ரீதியாக மேலும் வெற்றிகரமான நாடாக உருவெடுக்கும் இலக்கை மலேசியா கொண்டிருந்தால் அது வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் துறைகளில் வேகமாக வளர்ச்சியடையவேண்டும்,” என்று அவர் கூறினார்.

“ஆளில்லா வானூர்திகள், மின்னிலக்கத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. அவற்றுக்குப் பொருத்தமான, உகந்த உள்கட்டைமைப்பை உருவாக்கவேண்டும்,” என்று அவர் எம்டிஎக்ஸ்2026 எனும் கண்காட்சியின் நிறைவு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

மலேசியாவுக்கான உலக ஆளில்லா வானூர்திச் சம்மேளனம், மலேசிய ஆளில்லா வானூர்தி மேம்பாட்டுச் சங்கம் ஆகியவை சேர்ந்து அந்த மூன்று நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. 100க்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்களைக் கொண்ட அந்தக் கண்காட்சி ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்களையும் 46 நாடுகளைச் சேர்ந்த பேராளர்களையும் ஈர்த்தது.

ஆளில்லா வானூர்திச் சந்தையின் வளர்ச்சி

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலக ஆளில்லா வானூர்திச் சந்தையின் மதிப்பு 55 பில்லியன் டாலரைத் (71.181 பில்லியன் வெள்ளி) தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு அன்வார் கூறினார். முதலீடுகளுக்கு அச்சந்தையை உள்ளடக்கிய பொருளியல் பிரிவு முக்கிய உந்துகோலாக இருந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பிலான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள விதிமுறைகள்ரீதியாகவும் உள்கட்டமைப்புரீதியாகவும் ஆதரவளிக்குமாறு அவர் தமது அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அறிவியல் ஆய்வு அமைப்புகள் உள்ளிட்ட தரப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதோடு தனியார் துறையினர், அரசாங்க ஆய்வு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கிடையே மேலும் அணுக்கமான ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஅன்வார் இப்ராகிம்வானூர்தி