பெட்டாலிங் ஜெயா: மலேசியா வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டுமானால், அதற்கு பேரளவிலான முன்னேற்றம் தேவை என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
மலேசிய மதானி கல்வியாளர் மாநாடு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18ஆம் தேதி) நடைபெற்றது. அதில் நெறியாளராகப் பங்கேற்ற மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்றைய உலக சூழலில் வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டுமாயின் அதற்கு வழக்கமான வளர்ச்சி விகிதத்தில் முன்னேறினால் அது நடக்காது ஒன்று என்று விளக்கினார்.
“எந்தவிதமான வேக வளர்ச்சியும் தவிர்க்க முடியாத பிரச்சினைகளை உருவாக்கும். அது அரசியல் நெருக்கடியாகவும் இருக்கலாம் அல்லது சமூக நெருக்கடியாகவும் இருக்கலாம். ஆனால், இதைத் தேர்வு செய்யலாமா இல்லை வேண்டாமா என்று கேட்கக்கூடிய நிலை நமக்கு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு பாய்ந்து முன்னேற வேண்டியதுதான் நாம் செய்யக்கூடியது,” என்று அவர் கூறினார்.
நிறுவன உருமாற்றத்தில் அரசு சார்புடைய நிறுவனங்களின் பங்கு: புத்தாக்க நாட்டை உருவாக்கும் முயற்சியில் லாப ஈவு, பொறுப்புடைமை ஆகிய இரண்டிலும் சமநிலை காண்பது என்ற கருப்பொருளைக் கொண்ட விவாதத்தில் பங்கேற்ற திரு அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

