ஷாங்காய்: மலேசியாவின் அடுத்தகட்டப் பொருளியல் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் அதிக ஊதியம் பெறும் தொழில்வல்லுநர்களை உருவாக்கவும் தொழில்நுட்ப, தொழில்முறைப் பயிற்சிக்கு நாட்டின் தொழில்துறை நகர்வில் முதன்மை இடம் வழங்கப்பட்டு வருவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
உயர் வளர்ச்சி மற்றும் அதிக மதிப்புமிக்க பொருளியல் நிலைக்கு மாற மலேசியா முயன்று வருகிறது. குறிப்பாக, கணினிச் சில்லு வடிவமைப்பு , செயற்கை நுண்ணறிவு, பசுமைத் தொழில்நுட்பம், விவசாய உணவுத் துறை ஆகியவற்றில் நாடு கால்தடம் பதித்து வரும் நிலையில், இந்தத் தொழில்முறைப் பயிற்சி உத்தி அதன் முதன்மை அங்கமாக விளங்குவதாகப் பிரதமர் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற்ற ‘வோர்ல்ட்ஸ்கில்ஸ் மாநாடு 2026’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் பிரதமர் அன்வார்.
‘தொழில்நுட்பம், தொழில்துறைக் கல்வி மற்றும் பயிற்சி 2.0’ சீர்திருத்தக் கட்டத்தின் மூலம் தொழில்துறை நிறுவனங்களுக்கும் பயிற்சி நிலையங்களுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதன்மூலம் பகுதிமின்கடத்தி, செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் மாணவர்களின் பயிற்சி விரைவுபடுத்தப்படும்.
தேசியக் தொழில்நுட்பம், தொழில்துறைக் கல்வி மற்றும் பயிற்சி கொள்கை 2030ன் கீழ், கிட்டத்தட்ட 1,400 பயிற்சி நிறுவனங்களை உள்ளடக்கி 12 அமைச்சுகள், மாநில அரசாங்கங்கள், தனியார் அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புப் பணிகளைத் தேசியக் தொழில்நுட்பம், தொழில்துறைக் கல்வி மற்றும் பயிற்சி மன்றம் நிர்வகித்து வருகிறது.
மேலும், மலேசியாவின் தேசியப் பகுதிமின்கடத்தி உத்தியின்கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை ஈர்ப்பதுடன், 60,000 உயர் திறன்மிக்க மலேசியப் பொறியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதே முதன்மை இலக்கு என்றும் பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.
மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, மனித இயந்திரவியல், தொழில்முறை தானியக்கம், மின்சார வாகனங்கள், மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் சீனாவின் ஆற்றலைப் பயன்படுத்தி, அந்நாட்டுடனான தொழில்நுட்பம், தொழில் முறை கல்வி மற்றும் பயிற்சி ஒத்துழைப்பை மலேசியா மேலும் வலுப்படுத்த விரும்புவதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
