மலேசியா: வன்போலிகளைத் தடுக்க புதிய ‘ஏஐ’ சட்டங்கள்

மலேசியா: வன்போலிகளைத் தடுக்க புதிய ‘ஏஐ’ சட்டங்கள்

2 mins read
f33bc023-57ea-4408-b7ca-fcf72a3bcf23
மலேசிய மின்னிலக்க அமைச்சர் கோபிந்த் சிங் டியோ. - கோப்புப்படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: மலேசிய இணையவெளியில் தற்போது வன்போலிக் (deepfake) காணொளிகள் மலைபோல் குவிந்து வருகின்றன.

மாமன்னர் சுல்தான் இப்ராகிம், பிரதமர் அன்வார் இப்ராகிம் போன்ற தலைவர்களையும் போலிக் காணொளித் தயாரிப்பாளர்கள் விட்டுவைக்கவில்லை.

மலேசியத் தொலைத்தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் வேண்டுகோளை அடுத்து, கடந்த 2022 முதல் 2025 வரை, ஏறக்குறைய 225,000 வன்போலி, ஏமாற்று, மோசடி தொடர்பான உள்ளடக்கங்கள் இணையத்திலிருந்து அகற்றப்பட்டன.

கடந்த 2023 - 2025 காலகட்டத்தில் இணைய மற்றும் நிதி மோசடிகள் மூலம் கிட்டத்தட்ட 5.62 பில்லியன் ரிங்கிட் (S$1.81 பில்லியன்) இழப்பு ஏற்பட்டது. அதிலும் சென்ற ஆண்டு மட்டும் சாதனை அளவாக 2.77 பில்லியன் ரிங்கிட் பறிபோனது.

தொலைபேசி, காதல் மோசடி, மின்வணிகக் குற்றங்கள், இல்லாத கடன்கள், முதலீடுகள் போன்ற வழிகளில் பண மோசடி செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

இத்தகைய கவலைக்குரிய சூழலில், விரைவில் வரவிருக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆளுகைச் சட்டமானது, ஏஐ சார்ந்த தயாரிப்புகளில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் வகையில் ஓர் ஒத்திசைவான தேசியக் கட்டமைப்பை உருவாக்க இலக்கு கொண்டுள்ளது.

“புதிய சட்டமானது ‘ஏஐ’ அமைப்புச் செயற்பாட்டாளர்களின் பொறுப்புகளைக் கருத்தில்கொள்ள நோக்கம் கொண்டுள்ளது. தீங்கு நேர்வதைத் தடுக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் அதில் அடங்கும்,” என்று ‘தி ஸ்டார்’ ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது மின்னிலக்க அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

‘ஏஐ’ பயன்பாடு பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், பொதுமக்கள் நலனுடன் பொருந்திப்போகும் வகையிலும் இருப்பதை உறுதிசெய்வது முக்கியச் சவாலாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், வன்போலிகள் பற்றிப் பேசிய அமைச்சர் சிங், அத்தகைய ஆக்கமுறை ‘ஏஐ’ உள்ளடக்கங்கள் மிகவும் கடுமையானதாக உருவெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ஏமாற்று முதலீட்டுத் திட்டங்களை உண்மையான திட்டங்கள்போல் காட்டும் வகையில், முக்கிய ஆளுமைகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் பரிந்துரைப்பதுபோல் வெளியான வன்போலிக் காணொளிகள் குறித்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு ஆணையம் முன்னெச்சரிக்கை செய்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

பொறுப்பான புத்தாக்கத்திற்குப் பாதுகாப்பும் நம்பிக்கையும் கட்டாயம் அவசியம் என்பதை எடுத்துரைப்பதாக இத்தகைய செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்