தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் புதிய எம்பாக்ஸ் தொற்றுச் சம்பவம்

1 mins read
தீவிரம் குறைந்த வகைக் கிருமி என்று தகவல்
c3dfd432-2d70-4276-963c-5ac1392509c3
மலேசியாவில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 10 எம்பாக்ஸ் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் கிளேட் 2 கிருமித் திரிபால் ஏற்பட்ட பாதிப்புகள். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் கிளேட் 2 வகை எம்பாக்ஸ் கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு செப்டம்பர் 17ஆம் தேதி தெரிவித்தது.

இந்த வகைக் கிருமித் திரிபு தீவிரம் குறைந்த வகையாகக் கருதப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சு கூறியது.

அவருக்கு செப்டம்பர் 11ஆம் தேதி காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தோன்றியதாகவும் மறுநாள் தோலில் தடிப்புகள் ஏற்பட்டதாகவும் அது குறிப்பிட்டது. ஆடவருக்கு செப்டம்பர் 16ஆம் தேதி எம்பாக்ஸ் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மலேசியாவில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 10 எம்பாக்ஸ் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் கிளேட் 2 கிருமித் திரிபால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று கூறப்பட்டது.

தற்போது எம்பாக்ஸ் கிருமியின் புதிய திரிபு பரவுவதால் உலகெங்கும் இதுகுறித்த கவலை நிலவுகிறது. இந்த வகைக் கிருமி எளிதில் பரவக்கூடியது. இதனால் சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளும் சீழ் நிறைந்த கொப்புளங்களும் ஏற்படும்.

அண்மையில் எம்பாக்ஸ் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட மலேசிய ஆடவர், அறிகுறிகள் தென்படுவதற்கு முந்தைய 21 நாள்களில் நாட்டைவிட்டு எங்கும் சென்றிருக்கவில்லை என்று அமைச்சு தெரிவித்தது.

அவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படுவதாக மலேசியச் சுகாதார அமைச்சு கூறியது.

எம்பாக்ஸ் கிருமித்தொற்று பொதுவாகத் தீவிரம் குறைந்த ஒன்று என்றாலும், குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள் போன்றோருக்கு இதனால் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு.

குறிப்புச் சொற்கள்