மலேசியா: வெளிநாட்டுக் கட்டுமான ஊழியர்களை நிர்வகிக்க புதிய முறை

2 mins read
399bebdc-1941-4476-bd76-9eb007358dbe
உரிய கல்வித்தகுதி பெற்றுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் கட்டுமானத் துறையில் பணிபுரிவதைப் புதிய முறை உறுதிசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: கட்டுமானத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை நிர்வகிக்க உதவும் நோக்கில், மலேசியக் கட்டுமானத் துறை மேம்பாட்டு வாரியம் புதியதொரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த ஊழியர்கள் தங்கள் தாய்நாட்டில் கட்டுமானத் தேர்ச்சிச் சான்றிதழ் பெற்று, அதனை வாரியம் சரிபார்த்து உறுதிப்படுத்தியதும், உயிரளவை (பயோமெட்ரிக்) முறைப்படி பதிவுசெய்ய அம்முறை அழைப்பு விடுக்கிறது.

உரிய கல்வித்தகுதி பெற்றுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் கட்டுமானத் துறையில் பணிபுரிவதை அம்முறை உறுதிசெய்யும் என்றும் வாரியம் தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடம் உள்ளிட்ட அவர்களின் நல்வாழ்வைக் கண்காணிக்கவும் புதிய பதிவுமுறை உதவும் என்று வாரியம் குறிப்பிட்டதாக ‘பெர்னாமா’ செய்தி கூறியது.

வேலைவாய்ப்பு, சுகாதாரம் சார்ந்த பல்வேறு சட்டங்களுக்கு நிறுவனங்கள் இணங்கி நடக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க உதவவும் ஊழியர்கள் நலமாக, பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தவும் புதிய முறை உதவும்.

இப்புதிய முறை இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என்றும் ஆயினும், தங்கள் ஊழியர்களைப் புதிய முறையின்கீழ் பதிவுசெய்யும்படி நிறுவனங்களைத் தமது அமைச்சு ஊக்குவிக்கிறது என்றும் மலேசியப் பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுக் கட்டுமான ஊழியர்கள் 465,591 பேர் உள்ளனர் என்றும் அவர்களில் 150,699 பேர் கோலாலம்பூரிலும் 166,456 பேர் சிலாங்கூரிலும் உள்ளனர் என்றும் வாரியம் குறிப்பிட்டது.

“அந்த ஊழியர்களும் நம்மைப் போன்றவர்கள்தான்; சொந்த நாட்டைவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்கள். எவ்வாறாயினும், அவர்களின் நல்வாழ்வை அரசாங்கம் எளிதாக எடுத்துக்கொள்ளாது. அதனால்தான் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம்,” என்று அமைச்சர் நந்தா கூறினார்.

குறிப்புச் சொற்கள்