ஆசியான் நாடுகளுக்கு எண்ணெய் விற்கும் நிலையில் மலேசியா இல்லை: அமைச்சர்

ஆசியான் நாடுகளுக்கு எண்ணெய் விற்கும் நிலையில் மலேசியா இல்லை: அமைச்சர்

1 mins read
dc6e63b9-d3d5-4647-aba8-f372bb79a193
ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிலிப்பீன்ஸ் சென்ற மலேசிய முதலீடு, வர்த்தக, தொழில் அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: பெர்னாமா

சிபு: சொந்தத் தேவைக்கே எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால் மற்ற ஆசியான் நாடுகளுக்கு எண்ணெய் விற்கும் நிலையில் மலேசியா இல்லை என்று அந்நாட்டின் முதலீடு, வர்த்தக, தொழில் அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.

எண்ணெய் உற்பத்தி நாடு என்னும் நற்பேறு பெற்றுள்ளபோதிலும் நாள்தோறும் 400,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை மலேசியா இறக்குமதி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விநியோக நெருக்கடிக்கு இடையே எந்த ஓர் ஆசியான் நாடேனும் எண்ணெய் வாங்குவதற்காக மலேசியாவை அணுகியதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இந்தத் தகவல்களை அளித்தார்.

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிலிப்பீன்சின் சிபு நகர் சென்றுள்ள திரு ஜொஹாரி, வியாழக்கிழமை (மே 7) 27வது ஆசியான் பொருளியல் சமூக மன்றக் கூட்டத்திலும் ஆசியான் வெளியுறவு, பொருளியல் அமைச்சர்களின் கூட்டத்திலும் பங்கேற்ற பின்னர் மலேசிய செய்தியாளர்களிடம் பேசினார்.

திரவ எரிவாயுவைப் பொறுத்த வரை மலேசியா ஓர் ஏற்றுமதி நாடு என்று திரு ஜொஹாரி குறிப்பிட்டார்.

திரவ எரிவாயுவில் கிடைக்கும் உபரி, கச்சா எண்ணெய்யில் நிலவும் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் என்றார் அவர்.

மத்திய கிழக்கு மோதலால் உலக நாடுகளைப் போலவே மலேசியாவும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படக்கூடிய அளவிலேயே உள்ளன என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்