கோலாலம்பூர்: இந்தோனீசியாவில் எரியும் காட்டுத்தீயை அணைக்க மலேசியா ஒரு பொம்பார்டியர் சிஎல்-415எம்பி விமானம், மூன்று ஹெலிகாப்டர்கள், 50 பணியாளர்களை வழங்கி உதவ முன்வந்துள்ளது.
எனினும், அதற்கு இந்தோனீசியா இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் தேவையான சாதனங்கள்/பொருள்களையும் ஆட்களையும் ஒன்றுசேர்க்க மலேசியா தயாராய் இருப்பதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் அகமது ஸாகித் ஹமிடி கூறியுள்ளார்.
தாங்கள் வழங்கும் உதவி, தீயணைப்பில் இந்தோனீசியாவின் ஒட்டுமொத்த ஆற்றலில் சிறு பங்கு மட்டும் என்றாலும் இச்செயல் தனது அண்டை நாட்டுக்கு உதவுவதில் மலேசியாவின் கடப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“நமது உதவி எவ்வளவு சிறியதாக இருந்தாலும் நமக்கு ஆக அருகில் உள்ள அண்டை நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டுவது என்பது நல்லதொரு செயலாகும். பிரதமர் அன்வார் இப்ராகிம் இதன் தொடர்பில் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவைத் தொடர்புகொண்டுள்ளார்.
“இந்தோனீசியாவையும் சேர்த்து மலேசியா, சிங்கப்பூர், திமோர் லெஸ்டே ஆகியவற்றைப் பாதித்துள்ள புகைமூட்டப் பிரச்சினையைக் கையாள இந்த உதவியை வழங்க நாங்கள் விரும்புகிறோம்,” என்று திரு ஸாகித் திங்கட்கிழமை (அக்டோபர் 19) தலைநகர் கோலாலம்பூரில் சாலைப் பாதுகாப்புக் கூட்டம் 2026க்குத் தலைமை தாங்கியபோது குறிப்பிட்டார்.
