கோலாலம்பூர்: கனத்த மழை காரணமாக மலேசியாவின் ஏழு மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்நாட்டு உயர்கல்வி அமைச்சு, மாணவர்கள் இணையம் வழி கல்வி கற்க அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
“வெள்ளம் நகரப் பகுதிகளையும் குடியிருப்புப் பகுதிகளையும் சேதப்படுத்தியுள்ளது. சில இடங்களில் கல்வி நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அவற்றால் செயல்பட முடியவில்லை,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
“கிழக்குக் கடற்கரை மாநிலங்களிலும் வடக்கு மாநிலங்களிலும் வெள்ள நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தற்காலிகத் தங்குமிடம், அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று அது கூறியது.
அதேபோல், வெள்ளப் பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கவனமாக இருக்கும்படியும் உயர் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், வியட்னாம், தாய்லாந்துக்குச் செல்வதற்காகத் திட்டமிட்டுள்ள மலேசியர்கள் தங்களது பயணங்களை ஒத்திவைக்குமாறு மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“தற்போது இரு நாடுகளிலும் வானிலை மோசமாக உள்ளது. பல இடங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் கவனமாக இருப்பது முக்கியம்,” என்று திரு ஹசான் குறிப்பிட்டார்.
தற்போது வியட்னாமில் நிலைமை கவலையளிக்கும் வகையில் மோசமாக உள்ளது என்று கூறிய அவர், “பல இடங்களில் கனத்த மழை பெய்துவருகிறது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
“இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்றார்.

