எரிபொருள் விலை தொடர்பாகப் பரவும் பொய்களைத் தடுக்க மலேசியா உத்தரவு

எரிபொருள் விலை தொடர்பாகப் பரவும் பொய்களைத் தடுக்க மலேசியா உத்தரவு

படம்: இபிஏ

02 Apr 2026 - 10:04 am

1 mins read

கோலாலம்பூர்: எரிபொருள் விலைகள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக பொய்யான செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்க அமைப்புகளுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கிடையே மலேசிய மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்பொருட்டு, பொய்ச்செய்திப் பரவலை முறியடிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விலைகள் தொடர்பாகத் தவறான தகவல்களைத் தெரிவிக்கும் 96 சமூக ஊடகப் பதிவுகளை தொடர்புத்துறை கண்டறிந்ததாக அவர் கூறினார்.

இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ள அதிகாரிகளில் மலேசியக் காவல்துறை, தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ஆகியனவும் அடங்கும்.

“அதிகரித்துவரும் சவால்களால் உருவான அசாதாரணச் சூழ்நிலைகளில் நாம் பணியாற்றி வருகிறோம். ஆனாலும், தொடர்ந்து பொய்ச் செய்திகளைப் பரப்புவோரையும் வெறுப்பைக் காட்டுவோரையும் சதி மற்றும் துரோகம் செய்வோரையும் தடுப்பதும் சவாலாக உள்ளது,” என்றார் திரு அன்வார்.

உலகளாவிய எண்ணெய் விலை ஏற்றத்தைச் சமாளிக்க மலேசிய அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 4 பில்லியன் ரிங்கிட் (S$1.28 பில்லியன்) செலவிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஎரிபொருள்பொய்ச் செய்தி