குழந்தைகளின் வயதைச் சரிபார்க்க சமூக ஊடகத் தளங்களுக்கு மலேசியா உத்தரவு

குழந்தைகளின் வயதைச் சரிபார்க்க சமூக ஊடகத் தளங்களுக்கு மலேசியா உத்தரவு

படம்: ராய்ட்டர்ஸ்

01 Jun 2026 - 1:34 pm

2 mins read

கோலாலம்பூர்: ஜூன் 1 முதல் புதிய இணையப் பாதுகாப்பு விதிகள் நடைமுறைக்கு வரும் நிலையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் வயதைச் சரிபார்க்குமாறு சமூக ஊடகத் தளங்களை மலேசியா கட்டாயப்படுத்தும்.

அவ்வாறு சரிபார்க்கும்போது 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்யாதவாறு தடுக்க வேண்டும் என்றும் அந்தத் தளங்களை மலேசியா கேட்டுக்கொள்ளும்.

அந்த நடவடிக்கை ஃபேஸ்புக், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தும் எட்டு மில்லியன் மலேசியப் பயனாளர்களுக்குப் பொருந்தும்.

இருப்பினும், சமூக ஊடகத் தளங்கள் வயது சரிபார்ப்பு மற்றும் பதிவுத் தடையை மேற்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கால அவகாசம் எப்போது வரை என்பதை அது தெளிவுபடுத்தவில்லை.

சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படுவதாக உலக அளவில் எழுந்துள்ள கவலைகளைத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்தும் இளையோருக்குத் தடை விதிக்கும் ஆக அண்மைய நாடு மலேசியா ஆகும்.

16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்ய ஜூன் 1 முதல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மலேசிய தொடர்புத் தகவல் மற்றும் பல்லூடக ஆணையம் அண்மையில் தனது கேள்வி-பதில் அங்கத்தில் தெரிவித்திருந்தது.

சமூக ஊடகத் தளங்கள் வயதுச் சரிபார்ப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

கடப்பிதழ், அடையாள அட்டை போன்ற அரசாங்க ஆவணங்களின் அடிப்படையில் அந்தத் தளங்கள் வயது சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.

ஜூன் 1 முதல் நடப்புக்கு வரும் மலேசியாவின் இணையப் பாதுகாப்புச் சட்டம், சமூக ஊடகங்களில் வலுவான உள்ளடக்க நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.

“தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தினால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க முறையான நடவடிக்கைகளை சமூக ஊடகத் தளங்கள் செயல்படுத்த வேண்டும்.

“இவ்வகையான நடவடிக்கைகளில் புகார் அளிப்பது, பதில் அளிப்பது ஆகியவற்றுக்கான வழிமுறைகள், விளம்பரதாரர் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மற்றும் திரிக்கப்பட்ட உள்ளடக்கம் பற்றி பொருத்தமான இடங்களில் குறியிடுவது ஆகியவை அடங்கும்,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இணையப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான இந்த விதித்தொகுப்புகளைப் பின்பற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் (S$3.2 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அது எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசமூக ஊடகம்குழந்தை