மலேசியா: மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2,000க்கும் மேற்பட்டோர் கைது

2 mins read
524a6b2b-4dd4-493c-af1a-4f298a97110d
‘ஆப்பரேஷன் மியூல்’ நடவடிக்கையின்கீழ் கடந்த செப்டம்பர் 22-28 தேதிகளில் நடத்திய சோதனைகளில் 1,303 பேர் பிடிபட்டதாக மலேசியக் காவல்துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ருஸ்டி இசா தெரிவித்தார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: நாடு முழுவதும் அதிரடிச் சோதனைகளை நடத்தி, இணைய மோசடிக் கும்பல்களைச் சேர்ந்தவர்களாக நம்பப்படும் 2,000க்கும் மேற்பட்டோரை மலேசியக் காவல்துறை கடந்த செப்டம்பர் மாதம் கைதுசெய்தது.

மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தவர்களின் கணக்குகளைப் பயன்படுத்தி அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

‘ஆப்பரேஷன் மியூல்’ நடவடிக்கையின்கீழ் கடந்த மாதம் 22-28 தேதிகளில் நடத்திய சோதனைகளில் 1,303 பேர் பிடிபட்டதாக மலேசியக் காவல்துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

ஏமாற்று, வங்கிக் கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்தல், மற்றவர்களின் வங்கிக் கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொணர்தல், சட்டரீதியான நோக்கமற்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடுதல் போன்றவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.

அவை தொடர்பான 270 விசாரணை ஆவணங்கள் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்த வழிவகுத்தன என்றும் இன்னும் 313 ஆவணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் வியாழக்கிழமை (அக்டோபர் 30) செய்தியாளர்களிடம் திரு ருஸ்டி விளக்கினார்.

‘ஆப்பரேஷன் மெர்ப்பாத்தி காஸ்’ நடவடிக்கையின்கீழ் செப்டம்பர் 2-12 தேதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 790 பேர் பிடிபட்டனர். அவர்கள் தங்களின் வங்கிக் கணக்குகளை மோசடிச் செயல்களுக்குப் பயன்படுத்த அனுமதித்து, அதன்மூலம் 11.59 மில்லியன் ரிங்கிட் (S$3.59 மில்லியன்) இழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

அதன் தொடர்பிலான 275 விசாரணை ஆவணங்கள் நீதிமன்றக் குற்றச்சாட்டுகளுக்கு வழியமைத்துக் கொடுத்தன.

அத்துடன், மின்வணிக மோசடி அழைப்பு மையத்துடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் மேலும் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் திரு ருஸ்டி தெரிவித்தார். அக்கும்பல் இவ்வாண்டு ஜனவரி-மே காலகட்டத்தில் நாடு முழுவதும் மேற்கொண்ட மோசடி நடவடிக்கைகள்மூலம் 54 மில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்