கோலாலம்பூர்: அனைத்து வகை பகடிவதைப் பிரச்சினையை எதிர்கொள்ளும் நோக்கில் இரு திருத்த மசோதாக்களை மலேசிய நாடாளுமன்றம் டிசம்பர் 16ஆம் தேதியன்று நிறைவேற்றியது.
இந்தத் தகவலை மலேசியப் பிரதமர் அலுவலகச் (சட்டம், அமைப்புகள் ரீதியிலான சீர்திருத்தங்கள்) துணை அமைச்சர் எம்.குலசேகரன் வெளியிட்டார்.
“இந்தத் திருத்தங்கள் அரச மலேசிய காவல்துறைக்கு அதன் விசாரணைகளில் கைகொடுக்கும். பகடிவதை குற்றம் புரிபவர்களைக் குறிப்பிட்ட சட்டங்களின்கீழ் குற்றம் சுமத்த முடியும். உடல் ரீதியிலான காயங்களை ஏற்படுத்தும் துன்புறுத்தல்கள் மட்டுமின்றி மனவுளைச்சல், பதற்றம், அச்சம் ஆகியவற்றை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இத்திருத்தங்கள் வகை செய்யும்,” என்று திரு குலசேகரன் கூறினார்.

