கோலாலம்பூர்: மலேசியா, செயற்கை நுண்ணறிவு நன்னெறிப் பயன்பாட்டை ஊக்குவிக்க, தேசிய மேகக் கணினிக் கொள்கையை உருவாக்கவும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மலேசியாவில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) வெளியானது.
அந்நிறுவனங்கள் தங்கள் மேகக் கணினி, செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்திசெய்ய முக்கிய உள்ளமைப்பு வசதிகளை உருவாக்க முற்படுகின்றன.
மலேசியாவின் தேசிய அளவிலான மேகக் கணினிக் கொள்கை நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
பொதுச் சேவையில் புத்தாக்கம், செயல்திறன், பொருளியல் போட்டித்தன்மை மற்றும் வளர்ச்சி, பயனர் நம்பிக்கையையும் தரவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்துதல், அனைவரையும் மின்னிலக்க முறையில் உள்ளடக்குவதன் மூலம் குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியன அவை.
அரசாங்கம், திட்டங்களை ஒருங்கிணைக்க தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் ஒன்றையும் அமைக்கும். ஐந்தாண்டு தொழில்நுட்பச் செயல்திட்டத்தை நிறைவு செய்வதும் அடுத்த ஓராண்டிற்குள் நன்னெறி, நீடித்த நிலைத்தன்மையுடைய செயற்கை நுண்ணறிவு கடைப்பிடிக்கப்படுவதை அதிகரிக்க ஒழுங்குமுறை கட்டமைப்பும் அத்திட்டங்களில் அடங்கும்.
மலேசியாவில் கூகல் நிறுவனத்தின் US$2 பில்லியன் (S$2.57 பி.) மதிப்பிலான புதிய தரவு மையம், மேகக் கணினி வட்டாரத்துக்கான நில அகழ்வு நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார் பேசினார்.
“ஆக்ககர செயற்கை நுண்ணறிவுக்கான நடுவமாக மலேசியாவை நிலைநிறுத்த நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம். அந்த வகையில், தொழில்நுட்பப் பங்காளிகளிடமிருந்து முதலீடுகள், வலுவான, பாதுகாப்பான மின்னிலக்க உள்ளமைப்பைக் கட்டமைக்க முக்கியமானதாக இருக்கும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
மேகக் கணினிச் சேவைகளை வழங்குவதற்காக ஓர் உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனத்துடன் பல்லாண்டு பங்காளித்துவத்தை இந்த வாரம் அறிவித்த கூகல், அதன் முதலீடுகள் மலேசியாவில் 26,500 வேலைகளை உருவாக்கி, 2030க்குள் அதன் பொருளியலுக்கு US$3 பில்லியனுக்கும் அதிக பங்களிப்பை வழங்கும் என்று கூறியது.
இவ்வாண்டு மலேசியப் பொருளியலை முன்னெடுத்துச் செல்ல மின்னிலக்க முதலீடுகள் உதவியுள்ளன. கடந்த இரு காலாண்டுகளாக சந்தை எதிர்பார்ப்புகளை வளர்ச்சி விஞ்சியது. ஆசியாவிலேயே ஆகச் சிறப்பாக செயல்படும் நாணயங்களில் ஒன்றாக மலேசிய ரிங்கிட் உருவெடுத்துள்ளது.

