கோலாலம்பூர்: அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 200,000 பங்ளாதேஷ் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த மலேசியா திட்டமிட்டுள்ளதாக பங்ளாதேஷ் அமைச்சர் கூறியுள்ளார்.
“மலேசிய அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அந்தத் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்படுவார்கள்,” என்று பங்ளாதேஷின் உள்ளூர் அரசாங்கம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் மீர் ஷாஹே ஆலம் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாத இறுதியில் அந்த வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் கட்டம் கட்டமாகத் தொடங்கி, ஆறு மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மொத்தமுள்ள தொழிலாளர்களில், 10,000 பேர் வேலைவாய்ப்புக்கான செலவுகளை ஏற்க வேண்டியதில்லை,” என்று திரு ஆலம் கூறியதாக ‘தி டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பங்ளாதேசுக்கான மலேசியத் தூதர் முகமது ஷுஹாதா ஒஸ்மானும் உள்ளூர் அரசாங்கம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொயின் கான் ஆகியோருக்கு இடையே டாக்காவில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து திரு ஆலம் தனது அறிவிப்பை வெளியிட்டார்.
மலேசியாவில் கிட்டத்தட்ட 800,000 பதிவுசெய்யப்பட்ட பங்ளாதேஷ் தொழிலாளர்கள் உள்ளதாக அவர் கூறினார்.
பதிவுசெய்யப்படாத தங்கள் நாட்டு மக்களைப் பதிவு செய்யுமாறு மலேசியாவிடம் பங்ளாதேஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திரு ஆலம் தெரிவித்தார்.


