பெட்டாலிங் ஜெயா: செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) இடம்பெற்றுவரும் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்றவாறு செயல்படும் நோக்கில் மலேசியா அதன் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதோடு அந்தந்த தேவைகளுக்கென அமலாக்க அமைப்புகளை உருவாக்கிவருவதாக அந்நாட்டின் மின்னிலக்க அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
திறன்கண்ணாடிகளின் பயன்பாடு அதிகரித்துவருவது போன்ற போக்குகளைக் கையாள்வது நோக்கமாகும்.
ஆறப்போடாமல் நடவடிக்கை
வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களால் எழும் சவால்களைக் கையாள்வது குறித்து அவர் பேசினார். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக ஆறப்போடாமல் தகுந்த வேளைகளில் உகந்த நடவடிக்கைகளை எடுக்கும் மனப்பான்மையுடனும் திட்டமிட்டு செயல்படும் போக்குடனும் அரசாங்கம் இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
“ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளை உருவாக்கும்போது புதிய தொழில்நுட்ப அம்சங்கள் உருவெடுக்கும் என்பதை எதிர்பார்த்துச் செயல்படவேண்டும். ஒரு தொழில்நுட்ப அம்சம் உருவெடுத்த பிறகு நாம் பாதுகாப்பாக இருப்பதற்கான முடிவுகளை எடுத்து எதிர்த்திசையில் போகக்கூடாது,” என்று திரு கோபிந்த், 'த ஸ்டார்’ ஊடகத்திடம் சொன்னார்.
திறன்கண்ணாடி தொடர்பில் உள்ளூரிலும் உலகளவிலும் பதற்றம் அதிகரிப்பதைத் தொடர்ந்து அவர் பேசினார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டுள்ள மூக்குக் கண்ணாடிகளுக்கு இது பொருந்தும்.
தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது, பிறரின் வெளிப்படையான அனுமதியின்றி அவர்களைப் படமெடுப்பது அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளைப் பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களின் தொடர்பில் மக்கள் கவலை கொண்டுள்ளனர். பொதுமக்களுக்குத் தொந்தரவு இழைப்பது, அனுமதியின்றிப் பிறரைப் படமெடுப்பது ஆகியவை சட்டவிரோதமானவை என்று அவர் திட்டவட்டமாகச் சொன்னார்.
“ஒரு செயல் குற்றச் செயலாக இருந்தால் குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் 2010ன்கீழ் குற்றம் புரியப்பட்டால் அந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் விவரித்தார்.
மின்னிலக்கக் காலத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய மலேசியாவின் சட்டக் கட்டமைப்பு உருமாறவேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட திரு கோபிந்த், சட்டரீதியான, திட்டவட்டமான நடவடிக்கைகள் இப்போதே எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நீண்டகாலத்தில் செயற்கை நுண்ணறிவை சட்டரீதியாகக் கையாள்வதில் ‘ஏஐ மலேசியா’ நிறுவனம் செலுத்திவருவதாக அவர் தெரிவித்தார்.
