கோலாலம்பூர்: மலேசியாவில் திருத்தப்பட்ட பொதுச் சேவை சம்பள முறை டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்குவரும் என அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்தார்.
இதன்மூலம், அந்நாட்டு அரசாங்கத்தில் பணிபுரியும் 1.6 மில்லியன் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு, சம்பள மறுசீரமைப்பு ஆகியவற்றைப் பெறுவர் என்றும் அந்த நிலையத்தில் நடந்த அந்நாட்டு அரசாங்க நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது கூறினார்.
தலைமைச் செயலர், தலைமை இயக்குநர் போன்ற உயர்நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளோருக்கு 7விழுக்காடு சம்பள உயர்வு இருக்கும் எனவும் தொழில்துறை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்போருக்கு கிட்டத்தட்ட 15 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் மலேசியப் பிரதமர் சொன்னார்.
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 15% முதல் 42.7% வரை இருக்கும் என்றும் அந்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மலேசிய பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த சம்பள உயர்வு இருகட்டங்களாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு இவ்வாண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் 8 விழுக்காடு சம்பள உயர்வும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 7 விழுக்காடு சம்பள உயர்வும் அமலுக்கு வரும் என அவர் விவரித்தார்.
அதேவேளையில், உயர்நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளோருக்கு இவ்வாண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4 விழுக்காடு சம்பள உயர்வும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 3 விழுக்காடு சம்பள உயர்வும் வழங்கப்படும் என திரு அன்வார் இருகட்டங்களாக வழங்கப்படும் ஊதிய உயர்வு குறித்துத் தெளிவுபடுத்தினார்.
மேலும், “இந்தச் சம்பள முறை மாற்றங்களால் அரசாங்கத்திற்கு ஆண்டிற்கு 10 பில்லியன் ரிங்கிட் (S$2.97 பில்லியன்) செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும்போது முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும்,” என அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அரசு ஊழியர்கள் நாட்டிற்காகச் சிறப்பாகச் செயல்படுவதற்கு இந்தச் சம்பள உயர்வு அவர்களை ஊக்குவிக்கும் எனத் தான் நம்புவதாக திரு அன்வார் தெரிவித்தார்.
மலேசியாவில் ஜூன் மாதம் டீசலுக்கான மானியம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
இருப்பினும், அதனுடைய தாக்கம் சமாளிக்கக்கூடியதாக இருக்கும் என்று அந்நாட்டு மத்திய வங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி கூறியது.

