செப்பாங்: ஆசியானில் அங்கீகரிக்கப்பட்ட விமானப் பயிற்சி நடுவமாக மலேசியா தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருவதாக அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்துத் துறையின் தொடர்ச்சியான விரிவாக்கம், தீவிர பயிற்சி பெற்ற விமானிகள், சிப்பந்திகள், பொறியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், விமானப் போக்குவரத்து நிபுணர்கள் ஆகியோருக்கான தேவையை அதிகரிக்கும் எனக் கூறிய அவர், அதற்குத் தயாராகிவரும் பயிற்சி நிலையங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6), செப்பாங்கில் நடந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானப் பயிற்சிக் கழகத்தின் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் உள்ளடக்கிய கட்டடத்தின் திறப்பு விழாவில் பேசிய திரு லோக் இவ்வாறு தெரிவித்தார்.
விமானத் துறையின் வளர்ச்சியைத் திறமையான, பாதுகாப்பு உணர்வு, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நிபுணர்களால் ஆதரிக்கப்படுவதை உறுதிசெய்ய வலுவான பயிற்சி நிலையங்கள் அவசியம் என்றார் அவர்.
மேலும், “விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், பராமரிப்பு செயல்பாடு, பாதுகாப்பு சேவை, சுற்றுலா, தளவாடங்கள் ஆகியவற்றை திறமையான விமானப் பணியாளர்க் குழு ஆதரிக்கும். அத்துடன், உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தேசிய பொருளியல் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்,” என மலேசியப் போக்குவரத்து அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.
மலேசியா தனது விமானப் பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் வெளிநாட்டு வசதிகளை நம்பியிருப்பதைக் குறைக்கவும், வட்டார, அனைத்துலகப் பயிற்சியாளர்களை ஈர்க்கவும் அரசாங்கம், ஒழுங்குமுறை அதிகாரிகள் பயிற்சி வழங்குநர்களுக்கு இடையேயான நீடித்த ஒத்துழைப்பு அனுமதிக்கும் எனத் திரு லோக் கூறினார்.
உலகத்தரம் வாய்ந்த விமானப் பயிற்சி வசதிகள், மேம்பட்ட நவீனத் தொழில்நுட்பம், உலக விமானப் போக்குவரத்துத் தரநிலைகளுடன் முழுமையாக இணங்குதல் ஆகியவற்றை மலேசியா வழங்குவதற்குத் தேவையான அனைத்தையும் செய்வதே அமைச்சின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையாக இருந்தது என அவர் எடுத்துரைத்தார்.

