பெட்டாலிங் ஜெயா: மலேசியா மனிதர்களுக்குப் போடக்கூடிய தனது முதல் தடுப்பூசியை 2028ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தி செய்யத் தயாராகி வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அது ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.
பிசிவி13 என்று சுருக்கமாக அழைக்கப்படும் தடுப்பூசி, நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை உண்டாக்கும் 13 வகையான நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் போராடும் ஆற்றல் கொண்டது.
ஃபார்மானியாகா என்னும் உள்ளூர் நிறுவனம் அந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கும். அதற்காக சீனாவிலுள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து அது தொழில்நுட்ப உதவியைப் பெறும்.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனீசியா போன்ற நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறது மலேசியா.
‘த ஸ்டார்’ நாளிதழிடம் பேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லி காங் , மலேசியாவின் சொந்தத் தடுப்பூசி தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.
“உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசி, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சுகாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதில் நாட்டின் தயார்நிலையை வலுப்படுத்த உதவும். அத்துடன் நீண்டகாலத்துக்கு வெளிநாட்டு விநியோகத்தைச் சார்ந்திருக்கும் போக்கை அது குறைக்கும்,” என்றார் அவர்.
தடுப்பூசிகள் போன்ற முக்கியத் தொழில்நுட்பங்களில் உள்நாட்டு ஏற்பாடு இல்லாததால் ஏற்படக்கூடிய அபாயங்களை கொவிட்-19 பெருந்தொற்று உணர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“கொவிட்-19 பெருந்தொற்றின்போது தடுப்பூசி மிகவும் முக்கியமாகத் தேவைப்பட்டது. ஆனால், மனிதர்களுக்குப் போடக்கூடிய தடுப்பூசியைத் தயாரிக்கும் வசதி அப்போது நம்மிடம் இல்லை. அதனால், மற்ற நாடுகளைச் சார்ந்து நாம் இருக்க வேண்டிய நிலை இருந்தது.
“வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும்போது தடுப்பூசியின் விலையை அவர்களே நிர்ணயிப்பார்கள். நமக்கு எப்போது தரவேண்டும் என்பதையும் அவர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
“நெருக்கடியான வேளைகளில் அது நமக்குப் பிரச்சினையாக அமைந்துவிடுகிறது” என்றார் அமைச்சர்.

