புத்ராஜெயா: மலேசியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையத் தளமேடைகளில் தடுப்புகள் போடப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் புதன்கிழமை (ஜூன் 4) தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மாலை, வெளிநாட்டு ஆடவர் ஒருவர் பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்து மாண்டார்.
அந்த ஆடவர் ரயிலுக்கு அடியில் சுயநினைவின்றி கிடந்ததாக சிலாங்கூர் தீ, மீட்புப் பணித்துறை தெரிவித்தது.
மாண்டவர் 60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர் என்றும் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
அவரது உடலும் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் மலேசியக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையத் தளமேடைகளில் தடுப்பு போட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில் நிலையங்களிலும் கோலாலம்பூர் மோனோரயில் நிலையங்களிலும் தளமேடைத் தடுப்புகள் போடப்பட்டுவிட்டதாக செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் லோக் கூறினார்.
மலேசியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையத் தளமேடைகளிலும் தடுப்பு போடுவதால் கூடுதல் செலவு ஏற்படும் என்றபோதிலும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுப்பதாக அவர் கூறினார்.