உலகளாவிய நம்பிக்கை தரவரிசையில் மலேசியாவுக்கு ஏழாவது இடம்

உலகளாவிய நம்பிக்கை தரவரிசையில் மலேசியாவுக்கு ஏழாவது இடம்

2 mins read
3adfba8d-3d4d-421f-9bb9-0cb877a54650
மலேசியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கைக் குறியீடு 2025ல் 66 புள்ளிகளிலிருந்து இந்த ஆண்டு 71 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: 2026ஆம் ஆண்டுக்கான எடெல்மேன் நம்பிக்கை அளவுகோலின்படி, உலகளவில் ஏழாவது மிகவும் நம்பகமான நாடாக மலேசியா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது, நிறுவன நம்பிக்கை, சமூக நிலைத்தன்மை, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அந்நாடு சரியான பாதையில் செல்கிறது என்பதைக் காட்டுகிறது என ங்கா கோர் மிங் கூறினார்.

வீட்டுவசதி, உள்ளாட்சித் துறை அமைச்சரான ங்கா, “மலேசியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கைக் குறியீடு 2025ல் 66 புள்ளிகளிலிருந்து இந்த ஆண்டு 71 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், அரசு, வர்த்தகம், ஊடகம், அரசு சாரா நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளிலும் பொதுமக்களின் நம்பிக்கையில் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்கிறது.

“இந்தச் சாதனை, மலேசியாவின் ஆளுமை, பொருளியல் நோக்கு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் உள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது,” என்றும் கூறினார்.

“இந்த அங்கீகாரம் என்பது வெறும் ஓர் எண் மட்டுமல்ல, அது நாட்டின் நிறுவனங்கள் மற்றும் தலைமை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். நல்லாட்சி, பொருளியல் நிலைத்தன்மை, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் மலேசியாவின் முயற்சிகள் நேர்மறையான பலன்களைத் தருகின்றன என்பதை இது நிரூபிக்கிறது,” என்று அவர் வெள்ளிக்கிழமையன்று (மே 22) ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தேசிய முன்னேற்றத்திற்கு மக்களின் நம்பிக்கை அடித்தளமாக இருப்பதை உறுதிசெய்ய, மடானி அரசாங்கம் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், மக்கள் சார்ந்த கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று ங்கா கூறினார்.

“பல நாடுகள் அதிகரித்து வரும் பிளவு மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு வரும் இக்காலகட்டத்தில், உலகின் மிகவும் நம்பகமான நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்வது, பன்முகத்தன்மைக்கு மத்தியில் ஒற்றுமையைப் பேணுவதில் நமது வலிமையை வெளிப்படுத்துகிறது. இந்தச் சாதனை அனைத்து மலேசியர்களுக்கும் உரியது,” என்று அவர் கூறினார்.

சமூகப் பிரிவினைகள் மற்றும் தவறான தகவல்கள் தொடர்பான சவால்களை அந்த அறிக்கை எடுத்துக்காட்டினாலும், நாட்டின் நல்லிணக்கத்தையும் நீண்டகால வளத்தையும் பாதுகாப்பதில், பரஸ்பரப் புரிதல், அனைவரையும் உள்ளடக்குதல், பொறுப்பான பொது விவாதம் ஆகியவற்றைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்த ஆய்வின் முடிவுகள் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு நினைவூட்டலாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
நம்பிக்கைகுறியீடுமலேசியா