கோலாலம்பூர்: மேற்காசியாவிலும் மத்திய கிழக்கிலும் நாளுக்குநாள் மோசமாகிவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்படும் நியாயமான நம்பத்தகுந்த முயற்சிகளுக்கு ஆதரவு நல்க மலேசியா தயாராக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் சமூக ஊடகப் பதிவில் திங்கட்கிழமை பதிவிட்டுள்ளார்.
பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்தாலும் அந்த வட்டாரங்களில் பதற்றத்தைத் தணித்து அமைதியை நிலைநாட்ட எடுக்கப்படும் அனைத்து அரசதந்திர முயற்சிகளுக்கும் மலேசியா ஆதரவு தரும் என்று அவர் விளக்கினார். பேச்சுவார்த்தைகள் திறந்த மனப்பான்மையுடன் நடத்தப்படவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“கொள்கை அடிப்படையில், மலேசிய நாடாளுமன்றம் எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் ஈரானின் உயர்மட்ட தலைமைத்துவம் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த விடுத்துள்ள அழைப்பை நான் வரவேற்கிறேன்,” என்று திரு அன்வார் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவைபோன்ற அமைதிக்கும் கட்டுப்பாட்டுக்குமான அழைப்புகள் மதிக்கப்பட்டு, முக்கியமானதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.
தீவிர நடவடிக்கைக்கான குரல்கள் எழுந்தாலும் அவற்றின் விளைவுகள் மிகவும் கடுமையானதாகிவிடும் என்பதை வரலாறு உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் எச்சரித்தார்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் பல நாடுகள் மீது தாக்குதல் இடம்பெறுவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகப் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

