கோலாலம்பூர்: ஐநா பாதுகாப்பு மன்றத்தின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ரத்து அதிகாரம் நியாயமற்றது என்றும் உலக அமைதியைப் பேண அதனை நீக்கிவிட வேண்டும் என்றும் மலேசியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மலேசிய நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமையன்று (ஜூலை 13) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை துணையமைச்சர் லுகானிஸ்மான் அவாங் சாவ்னி, உலக வல்லரசுகள் இந்த ரத்து அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது பாதுகாப்பு மன்றத்தின் நம்பகத்தன்மையைக் குலைப்பதோடு, அனைத்துலக அமைதியை நிலைநாட்டுவதற்கும் தடையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
காஸா போன்ற பகுதிகளில் நடப்பது போன்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனிதநேயத்துக்கு எதிரான தீவிரமான அனைத்துலகச் சட்ட மீறல்கள் நடக்கும்போது இந்த ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்பு மன்றத்தில் ரத்து அதிகாரம் பயன்படுத்தப்படும்போது, அதுகுறித்து விளக்கமளிக்க 10 வேலை நாள்களுக்குள் ஐநா பொதுச் சபை தானாகவே கூட்டப்பட வேண்டும் என்ற ஐநாவின் தீர்மானத்தை மலேசியா ஆதரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாதுகாப்பு மன்றத்தில் அனைத்து வட்டாரங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க ஏதுவாக, அதன் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற மலேசியாவின் நிலைப்பாட்டையும் திரு லுகானிஸ்மான் தெளிவுபடுத்தினார்.
2036–2037ஆம் ஆண்டுக்கான ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மலேசியா முறைப்படி விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட துணையமைச்சர், வரவிருக்கும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் இக்கோரிக்கைகளை உலக அரங்கில் மீண்டும் வலுவாக முன்வைப்பார் என்றும் தெரிவித்தார்.

