கோலாலம்பூர்: பாலின ஈர்ப்பு விருப்புரிமையாளர்கள் (எல்ஜிபிடிகியூ) கலாசாரத்தை நிராகரிப்பதாக மலேசியா கூறியுள்ளது.
அந்த வகையில், அந்தக் கலாசாரத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் நிகழ்ச்சி குறித்து விசாரணை நடத்துமாறு மலேசியா உத்தரவிட்டுள்ளது. நடைபெறவிருக்கும் அந்நிகழ்ச்சி குறித்த பதிவுகள் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டன.
எல்ஜிபிடிகியூ விவகாரங்களை சாதாரணமானவையாக ஆக்க எடுக்கப்படும் முயற்சிகள் அரசமைப்புச் சட்டம், தற்போது நடப்பில் இருக்கும் சட்டங்கள், அதிகாரபூர்வக் கொள்கை ஆகியவற்றை மீறும் செயலாகும் என்று மலேசியப் பிரதமர் அலுவலக (சமய விவகாரங்கள்) அமைச்சர் முகம்மது நயிம் மொக்தார் புதன்கிழமை (மே 28) இரவு அறிக்கை மூலம் குறிப்பிட்டார்.
‘பெருமைப்படுங்கள்: விநோதமான கதைகளும் பாலியல் சுகாதார விழிப்புணர்வும்’ (Pride Care: Queer Stories & Sexual Health Awareness) என்ற கருப்பொருளில் எல்ஜிபிடிகியூ நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அந்நிகழ்ச்சி எந்த வகையிலாவது சட்டத்தை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு திரு நா’யிம் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார்.
“ரகசியமாக நடந்தாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது, பெரும்பாலான மலேசியர்கள் பின்பற்றும் சமூக ரீதியான வழக்கங்களுக்கும் சமயம் சார்ந்த கொள்கைகளுக்கும் மாறானது,” என்றும் அவர் சொன்னார்.

