மலாக்கா: மலாக்கா மாநிலத்தை இந்தோனீசியாவின் ரியாவ் தீவுடன் இணைக்கும் திட்டத்தை 2026ஆம் ஆண்டு மலேசியா மறுஆய்வு செய்கிறது.
அத்திட்டம் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டும் அத்திட்டத்திற்காக S$158,197 (500,000 ரிங்கிட்) ஒரு ஆலோசனை நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில முதல்வர் அப்துல் ரஹுஃப் யுசோ கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தெரிவித்திருந்தார் என்று பெர்னாமா செய்தி ஊடகம் கூறியுள்ளது.
தொழில்நகரம் உருவாகிவரும் மலாக்காவின் ‘பங்காலாக் பாலாக்’ கரையோரப் பகுதியான மஸ்ஜித் தானாவிலிருந்து, ரியாவ் மாநிலத் தீவுகளில் ஒன்றான ‘ரூபாட்’டுக்கு பாலம் கட்டுவதும், சுமத்திரா தீவில் உள்ள ‘டுமாய்’ பகுதிக்கு நெடுஞ்சாலை அமைப்பதும் திட்டத்தின் நோக்கமாகும்.
‘எண்ணெய் நகர்’ என்று அழைக்கப்படும் டுமாய், எரிவாயு விநியோகத்துக்கு மையமாக உள்ளது. சில மலேசிய நிறுவனங்கள் அங்கு பனை எண்ணெய்த் தோட்டங்களை நிறுவுகின்றன.
மலேசியா, இந்தோனீசியா இருநாடுகளின் கடல் எல்லைகள் மிகவும் நெருக்கமாக 47.4 கிலோமீட்டர் தூரத்தில் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ளது என்று முதல்வர் அப்துல் ரஹுஃப் குறிப்பிட்டார். இந்தப் பெருந்திட்டம் வருகின்ற ஜனவரி மாதம் மலேசிய தேசிய திட்டமிடுதல் மன்றத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு இந்தோனீசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் திரு அப்துல் கூறினார்.
மலாக்கா அரசாங்கம் மஸ்ஜித் தானாவில் தொழில்நகரத்தை கட்டியெழுப்ப 5,000 ஹெக்டர் பரப்பளவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதையும் அவர் வெளிப்படுத்தினார்.
உலகிலேயே மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துத் தடமான மலாக்கா நீரிணையில் பாலம் அமைக்கும் திட்டம் 1996ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 1997 ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டுவரை நீடித்த ஆசிய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அதன் முக்கியத்துவம் வலுவிழந்தது. மேலும் இயற்கை ஆய்வாளர்கள் பொருளாதார வரவைவிட திட்டத்தால் பாதகமே அதிகம் என்று கருத்துரைத்தனர்.
அதன்பிறகு 2006ஆம் ஆண்டில் அப்போதைய மலாக்கா மாநில முதல்வர் முஹம்மது அலி ருஸ்தாம், ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும் பாலம் கட்டுவது தொழில்நுட்ப நடைமுறைகளின்படி சாத்தியம் என்றும் கூறியிருந்தார்.

