தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் அரிசித் தட்டுப்பாடு; விளைச்சலை அதிகரிக்க ஆலோசனை

2 mins read
3df76f50-7564-469e-a8d2-075f67cdb071
மலேசியாவில் ஒரு கிலோ உள்நாட்டு அரிசி 2.60 ரிங்கிட்டுக்கு (S$0.75) விற்கப்படுகிறது.  - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், நாட்டின் அரிசி இருப்புகளை நிர்வகிக்கும் முறையையும் அதன் விவசாயத் துறையையும் மாற்றியமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மலேசியாவில் தற்போது நிலவும் அரிசித் தட்டுப்பாடு எதிர்காலத்தில் மோசமடையாமல் இருக்க அது அவசியம் என்கின்றனர் அவர்கள்.

மலேசியாவில், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலை, செப்டம்பர் 1ஆம் தேதி, 36 விழுக்காடு உயர்ந்தது.

அதனால் பயனீட்டாளர்கள் உள்ளூர் அரிசி வகைகளை நாடத் தொடங்கினர்.

அந்நாட்டுச் சந்தையில் 65 விழுக்காடு உள்ளூர் அரிசி வகைகளே விற்பனை செய்யப்படுகிறது. அது கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விற்கப்படுகிறது.

அங்கு ஒரு கிலோ உள்ளூர் அரிசி 2.60 ரிங்கிட்டுக்கு (S$0.75) விற்கப்படுகிறது.

அதேநேரத்தில் இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி, ஒரு கிலோ நான்கு ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை முன்பைவிட தற்போது உயர்ந்துள்ளது. “எங்கள் கடைக்கு உள்ளூர் அரிசி விநியோகம் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதனுடைய இருப்பு முடிந்துவிடுகிறது,” என்று மைதீன் பேரங்காடி தெரிவித்தது.

பயனீட்டாளர்கள் அதிக அளவில் அரிசியை வாங்கிக் குவிக்கும் போக்கு குறைந்திருப்பதாக வேளாண், உணவுப் பாதுகாப்புத் துணையமைச்சர் சான் ஃபூங் ஹின் கூறினார்.

இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அரிசித் தட்டுப்பாடு மீண்டும் தலைதூக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

சிலர் அரிசியை பதுக்கி வைப்பதும் பிரச்சினைக்கு ஒரு காரணம். ஆனால் அரிசியைப் பதுக்குவோர் மீது சட்டம் பாயம் என்று அண்மையில் பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்