மலேசியாவில் பல முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு அனுகூலங்களை வழங்கப் பெரிதும் தயங்குவர் எனக் கூறப்படுவதுண்டு. அதற்கு விதிவிலக்காக இருக்கிறார் கைருல் அமிங்.
இவர், பிரபல 'சம்பால் நியெட்' சம்பால் மிளகாய் வகையைத் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்.
சமையல் கலைஞரான திரு கைருல், நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிளந்தான் மாநிலத்தில் உள்ள தனது ஆலை ஊழியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு வழங்குவது பதிவான காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருந்தார்.
அந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டது.
சிறப்பு போனஸ் தொகை அடங்கிய அஞ்சல் உறைகளை ஊழியர்களுக்கு வழங்கும் காட்சி காணொளியில் இடம்பெற்றது.
போனஸ் தொகை பெற்ற சில ஊழியர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்ததும் தெரிந்தது. ஒவ்வோர் அஞ்சல் உறையிலும் ஏறக்குறைய 3,000 ரிங்கிட் இருந்ததென சீன நாளிதழான சின் சியூ தெரிவித்தது.
அதோடு, புதிய ஆடைகள் வாங்குவதற்கான உதவி போன்ற அனுகூலங்களையும் 30 வயது திரு கைருல் வழங்கியுள்ளார். ஊழியர்களுக்குத் தான் விடுமுறை அளிக்கக்கூடும் என்றும் அவர் காணொளியில் கூறியிருந்தார்.

