வெளிநாட்டு ஊழியர்களிடம் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள்மீது நடவடிக்கை

வெளிநாட்டு ஊழியர்களிடம் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள்மீது நடவடிக்கை

2 mins read
825a9c88-7350-4356-b481-499e759cd35c
நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் மலேசியா சென்றடைந்த பிறகு வேலையின்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

சில ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்து, பின்னர் அவர்களை வேலையின்றித் தவிக்கவிடும் சம்பவங்கள் தொடர்பில் மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தகைய ஆட்சேர்ப்பு நிறுவனங்கள்மீது தடை விதிக்கப்படும் என்றும் அவற்றின் ஆட்சேர்ப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடியேறிகள் மலேசியாவில் வேலையின்றித் தவிப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் சென்ற வாரம் தகவல் வெளியிட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலோர் பங்ளாதேஷையும் நேப்பாளத்தையும் சேர்ந்தவர்கள்.

அதிகமான தொகையை ஆட்சேர்ப்புக் கட்டணமாகச் செலுத்திய அவர்கள், மலேசிய மண்ணை மிதித்த பிறகே தாங்கள் வேலையில் சேர இயலாது என்பதைத் தெரிந்துகொண்டனர்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் சென்ற மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது மலேசிய அரசாங்கம்.

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த மலேசியத் தொழிலாளர் துறை, சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.

முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் சகித்துக்கொள்ளப்பட மாட்டா என்றும் மின்னஞ்சல் மூலம் அது தெரிவித்தது.

மோசடியில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் சிலரை அரசாங்க வசிப்பிடங்களில் தங்கவைத்திருப்பதாகவும் அவர்களின் தங்குமிடச் செலவையும் சம்பளத்தையும் வழங்கும்படி சில நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தொழிலாளர் துறை குறிப்பிட்டது.

தங்குமிடங்களில் நேப்பாள ஊழியர்கள் இருவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக வெளியான தகவல்களை தொழிலாளர் துறை மறுத்தது. வேலை மோசடி தொடர்பில் மலேசியாவிற்கு விசாரிக்கச் சென்ற நேப்பாள ஆட்சேர்ப்பு முகவர் ஒருவர் உயிரிழந்ததாகக் காவல்துறையை மேற்கோள்காட்டி அது குறிப்பிட்டது. அதுகுறித்த விசாரணை தொடர்கிறது.