தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மாரில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க மலேசியா வேண்டுகோள்

2 mins read
168d1eb5-cf21-40ad-a3d0-d6f3f9a4e892
மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட் பகுதி ஒன்றில் சேதமடைந்த புத்தர் சிலைக்கு அருகே உள்ள சிதைவுகளை அகற்றும் மக்கள். - படம்: ஏஎஃப்பி

புத்ரஜெயா: நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அந்நாட்டின் ராணுவ அரசாங்கம் அறிவித்துள்ள போர் நிறுத்தத்தை நீடிக்கச் செய்யும் முயற்சிகளை மலேசியா எடுத்து வருகிறது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இத்தகவலை வெளியிட்டார். மலேசியா, ஆசியான் கூட்டமைப்புக்குத் தற்போது தலைமை வகிக்கிறது.

திரு அன்வார், மியன்மார் ராணுவ அரசாங்கத்தின் தலைவரான மூத்த ஜெனரல் மின் ஆங் ஹிலெய்ங்கை இம்மாதம் 18ஆம் தேதி தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் சந்திக்கவிருக்கிறார். அப்போது இந்த வேண்டுகோளை அவரிடம் முன்வைக்கப்போவதாக திரு அன்வார் கூறினார்.

“தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏப்ரல் 22ஆம் தேதி நிறைவடைந்துவிடும். அதை நீட்டிக்குமாறு நான் கேட்டுக்கொள்ளப்போகிறேன்,” என்று திரு அன்வார் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) நடந்த மலேசிய நிதி அமைச்சின் சந்திப்பில் தெரிவித்தார்.

திரு அன்வார், ஆசியான் விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ‌ஷினவத்ரவைச் சந்திக்க பேங்காக் செல்லவிருக்கிறார். அப்போது திரு மின் ஆங் ஹிலெய்ங்குடனான சந்திப்பும் நடக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான சந்திப்பு முடிந்ததும் விரைவில் பேங்காக் புறப்படுவேன்,” என்றார் திரு அன்வார்.

ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கிய ரிக்டரில் 7.7 அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மியன்மாரின் ராணுவ அரசாங்கம் இம்மாதம் இரண்டாம் தேதி அறிவித்தது.

அதனையடுத்து மலேசியா தனது மீட்புக் குழுவை மியன்மாருக்கு அனுப்பிவைத்துள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க மியன்மாரில் தற்காலிக அவசரகால ராணுவ மருத்துவமனையையும் (temporary military field hospital) மலேசியா அமைத்துள்ளது. 

ஆசியானுக்கும் மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துக்கும் இடையே அரசதந்திர ரீதியான தொடர்புகள் இல்லை. இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் இச்சந்திப்பு இடம்பெறுகிறது என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்