தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளிகளில் வன்முறையைக் குறைக்க விதிமுறைகளைக் கடுமையாக்க முனையும் மலேசியா

2 mins read
3f5a2e4d-1050-493a-bcc1-2ddafffc556b
மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் முன்பு உலோகக் கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்திச் சோதனை நடத்திய எஸ்எம்கே பண்டார் உத்தாமா டாமான்சாரா 4 பள்ளியின் ஆசிரியர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியா, பள்ளிகளில் வன்முறையைக் குறைக்க விதிமுறைகளைக் கடுமையாக்குவது குறித்துப் பரிசீலிக்கிறது. மீண்டும் பிரம்படியைப் பயன்படுத்துவது, கைப்பேசிகளைத் தடை செய்வது, 16 வயதுக்கு உட்பட்டோருக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பது முதலியவை அவற்றுள் சில.

பள்ளிகளில் இளையர்களிடையே கட்டொழுங்கு குறைந்துவருவதாகவும் பகடிவதையும் வன்செயல்களும் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவற்றைச் சரிசெய்யக் கடும் நடவடிக்கைகளை எடுக்கப் பள்ளிகள் முயற்சிகளை மேற்கொள்கின்றன.

அண்மை மாதங்களில் பள்ளிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து புதிய விதிமுறைகள் பரிசீலிக்கப்படுகின்றன. மலேசியாவில் மாணவர்களின் பாதுகாப்பு, நன்னெறிக் கல்வி, பள்ளி ஒழுங்குமுறை முதலியவை பேசுபொருளாகியிருக்கின்றன.

மலாக்காவிலும் கெடாவிலும் அண்மையில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமர் அன்வார் இப்ராகிம், பள்ளிகளில் ஒழுங்கை மீண்டும் கொண்டுவரப் பிரம்படியைப் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களைக் கடும் வழிகாட்டி நெறிமுறைகளின்கீழ் அனுமதிக்க அரசாங்கம் தயாராய் இருப்பதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) கூறினார். இருப்பினும் பரிவையும் இரக்கத்தையும் கவனத்தில் கொள்ளும் சமநிலையான அணுகுமுறை தேவை என்றார் அவர்.

“பகடிவதைச் சம்பவங்களைப் பள்ளிகள் மூடி மறைக்கக்கூடாது. சிறிய சம்பவமாக இருந்தாலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை கூறவேண்டும். தேவைப்பட்டால், கண்டித்தலின் ஒரு பகுதியாகப் பிரம்படி கொடுக்கலாம்,” என்று திரு அன்வார் சொன்னார்.

மனித உரிமைக் குழுக்கள் அதனை அதிகம் எனக் கருதக்கூடும் என்று அவர் கூறினார். ஆனால் சில சம்பவங்களில், கொஞ்சம் நீக்குப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மலேசியப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பள்ளிகளில் கடுமையான வழிகாட்டி நெறிமுறைகளின்கீழ் பிரம்படி அனுமதிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு கூறுகிறது. ஆனால் அண்மை ஆண்டுகளில் அத்தகைய நடைமுறை ஊக்குவிக்கப்படுவதில்லை என்று ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்