கோலாலம்பூர்: மலேசிய ஆகாயப் படை, நாட்டில் உள்ள இளையர்களின் மின்னிலக்கத் திறனைப் பயன்படுத்தி தனது ஆளில்லா வானூர்தி ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அதன் தலைவர் ஜெனரல் மாலிக் ரசாக் சுலைமான் கூறியுள்ளார்.
அந்த இளையர்களில் காணொளி விளையாட்டாளர்களும் அடங்குவர் என்றார் அவர்.
இருப்பினும், காணொளி விளையாட்டுகளில் அனுபவம் இருந்தால் மட்டும் தகுதிபெற்றுவிட முடியாது என்ற ஜெனரல் மாலிக் ரசாக், அத்தகையோர் ராணுவத்தின் ஆளில்லா வானூர்திகளை இயக்குவோராகவும் மாறவேண்டும் என்றார்.
மலேசிய ராணுவம், தற்காப்புத் தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன் ஆளில்லா வானூர்திக் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் வல்லுநர்களையும் அடையாளம் கண்டு வருகிறது என்று திரு மாலிக் ரசாக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, தென் சீனக் கடலில் புலனாய்வு, கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அது தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“நவீனமாகிவரும் ராணுவத் தொழில்நுட்பங்களைச் சமாளிக்க நிபுணத்துவம் வாய்ந்த அறிவு, திறன் ஆகியவற்றுடன் செயலாக்க ஒருங்கிணைப்பும் சவால்மிக்க சூழல்களில் சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றலும் தேவை,” என்று அண்மையில் நடைபெற்ற நேர்காணலில் ஜெனரல் மாலிக் ரசாக் பகிர்ந்துகொண்டார்.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் மலேசியா மூன்று அன்கா-எஸ் எனும் ஆளில்லா வானூர்திகளை 423.8 மில்லியன் ரிங்கிட்டிற்கு வாங்கியது. இரண்டாம் கட்டமாக அதுபோல மேலும் மூன்று ஆளில்லா வானூர்திகளை வாங்க முற்படும் மலேசியா, தென் சீனக் கடலிலும் சாபாவிற்கு அருகில் உள்ள கடல் பகுதியிலும் புலனாய்வுயத் திறனையும் ஆளில்லா வானூர்தி ஆற்றலையும் வலுப்படுத்த முயல்கிறது.
காணொளி விளையாட்டுகளிலோ பொழுதுபோக்கிற்காக ஆளில்லா வானூர்திகளை இயக்குவதிலோ உள்ள அனுபவம் தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒருவரைத் தகுதிபடுத்திவிட முடியாது என்ற ஜெனரல் மாலிக் ரசாக், அதற்கென சிறப்புப் பயிற்சிகளும் தொழில்நுட்பப் புரிதலும் கட்டுப்பாடும் தேவை என்று வலியுறுத்தினார்.
மின்னிலக்கத் தொழில்நுட்பமும் இளம் தலைமுறையிடம் மாறிவரும் ஆர்வமும் ராணுவத்திற்கு ஏற்ற திறன்களை அடையாளம் காண்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
