கோலாலம்பூர்: மலேசியா, நேப்பாளத்தில் காணாமல்போன தனது குடிமக்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக ‘ஸ்மார்ட்’ எனும் சிறப்பு மலேசிய பேரழிவு உதவி, மீட்புக் குழுவை அனுப்புகிறது. அதோடு ஒரு மில்லியன் டாலர் உதவி நிதியையும் (S$1,273,500) அது அறிவித்துள்ளது.
இந்தக் குழுவை விரைவாக அனுப்புவதற்கு வசதியாக தேசியப் பாதுகாப்பு மன்றமும் தேசியப் பேரிடர் மேலாண்மை முகவையும் வெளியுறவு அமைச்சு வழியாக நேப்பாள அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
“மலேசியர்களைக் கண்டறிந்து அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதோடு, அவர்களின் பாதுகாப்பு, நலனை உறுதி செய்வதிலும் ஸ்மார்ட் குழுவிற்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேப்பாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் பேரிடருக்குப் பிந்தைய மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் நேப்பாளத்திற்கு ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் உதவி நிதி வழங்கப்படும் என்றும் அன்வார் கூறியுள்ளார்.
நேப்பாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம், நிலச்சரிவைத் தொடர்ந்து 55 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதை வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) உறுதிப்படுத்தியது.


