இணையவழி குழந்தைப் பாலியல் சுரண்டலைத் தடுப்பதில் மலேசியா தீவிரம்

இணையவழி குழந்தைப் பாலியல் சுரண்டலைத் தடுப்பதில் மலேசியா தீவிரம்

படம்: இபிஏ

24 Sep 2026 - 7:18 pm

1 mins read

கோலாலம்பூர்: இணையவழி குழந்தைப் பாலியல் சுரண்டலைத் தடுப்பதில் மலேசியா தீவிரம் காட்டி வருகிறது.

குழந்தைப் பாலியல் சுரண்டலுக்காக இணையக் கட்டமைப்புச் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திற்கும் காவல்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

இணையச் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்துவதில் காவல்துறைக்கு, குறிப்பாகக் குற்றப் புலனாய்வுத் துறையின் பிரிவுக்கு உதவ முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற தகவல் தொடர்பு அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இணையவழி குழந்தைப் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகள் குறித்த காவல்துறையின் விசாரணைகளுக்கு உதவ, இந்த ஒத்துழைப்பில் தொழில்நுட்ப மற்றும் தடயவியல் அம்சங்களும் அடங்கும் என்று ஃபாஹ்மி கூறினார்.

அண்மையில் நடத்தப்பட்ட அமலாக்கச் சோதனையில் குழந்தைப் பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 53 பேரில், 13 வயதுச் சிறுவன் உட்பட எட்டுப் பதின்ம வயதினரும் அடங்குவர்.

மேலும், ரகசிய இணையக் குழுக்கள்மூலம் குழந்தைப் பாலியல் தொடர்பான காணொளிகள் தயாரிப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளையும் காவல்துறை கண்டறிந்தது.

இதற்கிடையில், இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டக் கட்டமைப்பின்மூலம் சமூக ஊடகத் தளங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கும் மலேசியா முக்கியத்துவம் அளித்து வருவதாக ஃபாஹ்மி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபாலியல்காவல்துறை