தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் பாலியல் தொல்லைச் சம்பவங்கள் 2022 முதல் அதிகரிப்பு: நேன்சி ‌ஷுக்ரி

2 mins read
5ffc12b6-2fac-4ccb-ad8d-d5b69ddc03bb
சிபு ஜெயா சமூக மண்டபத்தில், ‘சமூக அன்பு, பாலியல் தொல்லைக்கு எதிரான ஆதரவுத் திட்டம்’ தொடங்கப்பட்டது. - படம்: த ஸ்டார்

சிபு: மலேசியாவில் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக அமைச்சர் நேன்சி ‌ஷுக்ரி கூறியிருக்கிறார்.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சரான அவர், 2024ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் காவல்துறைக்குப் பாலியல் தொல்லை தொடர்பில் கிடைத்த சம்பவங்களின் எண்ணிக்கை 666ஆக இருந்ததாகத் தெரிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவான 529 சம்பவங்களைக் காட்டிலும் அது அதிகம்.

“2022ஆம் ஆண்டில் பதிவான 488 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் அது மேலும் அதிகம்,” என்றார் அவர். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.

பாலியல் தொல்லைக்கு எதிரான தீர்ப்பாயத்தில் பாலியல் தொல்லை குறித்து 28 புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். அவற்றில் பத்துப் புகார்கள் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

திருவாட்டி நேன்சி, சிபு ஜெயா சமூக மண்டபத்தில், ‘சமூக அன்பு, பாலியல் தொல்லைக்கு எதிரான ஆதரவுத் திட்டத்தை’ தொடங்கிவைத்துப் பேசினார்.

மகளிர் மேம்பாட்டுத் துறை மூலம், தமது அமைச்சு பொதுமக்களிடம் பாலியல் தொல்லைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த கடப்பாடு கொண்டுள்ளதாக திருவாட்டி நேன்சி கூறினார்.

பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது திட்டத்தின் நோக்கமாகும்.

அதே நிகழ்வில், மகளிர், குழந்தைகள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மற்ற குழுக்களுக்கான உள்ளூர் சமூக ஆதரவு நிலையச் சேவை முகப்பும் நிறுவப்பட்டது.

அந்தச் சேவை முகப்பின் மூலம், ஒட்டுமொத்த சமூகம் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்க அணுகுமுறைக்கு ஏற்ற முழுமையான சமூக உளவியல் சார்ந்த சேவைகளை உள்ளூர் சமூகம் பெற முடியும் என்றார் திருவாட்டி நேன்சி.

குறிப்புச் சொற்கள்